அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் 12 வகை மூலிகை உணவு தானம்-கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் 12 வகை மூலிகை உணவு தானத்தை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
நல்லம்பள்ளி:
வள்ளலார் பெருமானின் 200-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, இந்துசமய அறநிலையத்துறை சார்பில், நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் சார்பில், அதியமான்கோட்டை சோமேஸ்வரர் கோவில் சமுதாய கூடத்தில் பொதுமக்களுக்கு 12 வகை மூலிகை உணவு தானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு 3 நாள் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நேற்று முதல் நாளில் கருப்பட்டி அல்வா, பொன்னி பச்சரிசி, வல்லாரை துவரம்பருப்பு குழம்பு, விளாம்பழ ரசம், தூதுவளை பிரண்டை துவையல், இளநீர் பாயாசம், வாழைப்பூ வடை, ஆவாரம்பூ ஊறுகாய் உள்ளிட்ட 12 வகையான மூலிகை உணவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் தாசில்தார் ஆறுமுகம், உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், ஆய்வாளர் தனுசூர்யா, கோவில் குருக்கள் கிருபாகரன் மற்றும் கோவில் பணியாளர்கள், திருவருட்பிரகாச வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.