கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் ரூ.24½ லட்சம் உண்டியல் காணிக்கை
கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் ரூ.24½ லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.
கொடுமுடி
கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் வாசம் செய்யும் மகுடேசுவரர் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 20 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த 20 உண்டியல்களையும் திறந்து எண்ணும் பணி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
அனைத்து உண்டியல்களிலும் சேர்த்து 24 லட்சத்து 67 ஆயிரத்து 745 ரூபாய் இருந்தது. மேலும் 39 கிராம் தங்கத்தையும், 76 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தார்கள்.
கடந்த 3 மாதங்களில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கை இதுவாகும். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் வருகை குறைந்திருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் பழனிக்கு காவடி சுமந்து செல்லும் பக்தர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் கொடுமுடி மகுடேசுவரர் கோவிலுக்கு வந்தார்கள். அதன் காரணமாக உண்டியல் காணிக்கை அதிகரித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் மொடக்குறிச்சி ஆய்வாளர் தேன்மொழி, கொடுமுடி கோவில் செயல் அலுவலர் சுகுமார் (பொறுப்பு), ஸ்ரீ சங்கர வித்யாசாலா பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டார்கள்.