மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது-போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளான விஜயகோபாலபுரம், திருவளக்குறிச்சி ஆகிய கிராமங்களில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் பேசுகையில், சாலை விபத்து என்பது கவனக்குறைவால் ஏற்படுவதாகும். நாம் சாலையில் கவனமாக சென்றால் கூட நமக்கு எதிரே வருபவர்கள் எந்த மனநிலையில் வருகிறார்கள் என்பது நமக்கு தெரியாது. எனவே நாம் மிகவும் கவனமாக பயணம் செய்வதின் மூலம் சாலை விபத்தினை தவிர்க்கலாம். மேலும் மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், என்றார். இதில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.