பாடாய் படுத்தும் 10 ரூபாய் நாணயம்
பாடாய் படுத்தும் 10 ரூபாய் நாணயம்
போடிப்பட்டி
திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர்களின் முக்கிய வணிக முறையாக பண்டமாற்று முறை இருந்தது. அதன் பின்னர் வணிகத்துக்காக நாணயங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இவ்வாறு பயன்படுத்தப்பட்ட நாணயங்களுக்கு என நீண்ட நெடிய வரலாறு உள்ளது.
நாணயங்கள் என்பது வெறும் வணிக பயன்பாட்டுக்கானது மட்டுமல்லாமல் அவற்றின் மூலம் பண்டைய வரலாறு, வணிக முறை, வாழ்வியல், கலை, கலாசாரம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. நாணயங்களை உருவாக்க பல்வேறு காலகட்டங்களில் தோல் முதல் தங்கம் வரை பல்வேறு பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியாவில் 13-ம் நூற்றாண்டில் யாதவ அரசர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தோல் நாணயங்கள் தோல்வியடைந்துள்ளன.
உலக அளவில் நாணயங்களை வெளியிடுவதில் இந்தியர்களும், சீனர்களும் முன்னணியில் இருந்துள்ளனர். இந்தியாவில் தோண்ட தோண்ட பலவிதமான, பழமையான நாணயங்கள் கிடைத்து வருகின்றன. இவ்வாறு கிடைக்கும் பழமையான நாணயங்களுக்கென தனி வரலாறு உண்டு. பெருமளவு மதிப்பு உண்டு. ஆனாலும் பொது வெளியில் அவை செல்லா காசுகளாகவே பார்க்கப்படுகின்றன. அதுபோலவே தமிழகத்தில் நம் தாத்தா பாட்டி காலத்தில் புழக்கத்தில் இருந்த காலணா, அரையணா போன்ற நாணயங்களும், நமது குழந்தை பருவங்களில் புழக்கத்தில் இருந்த ஒரு பைசா, 2 பைசா, 3 பைசா, 5 பைசா, 10 பைசா, 20 பைசா மற்றும் சமீப காலங்கள் வரை புழக்கத்தில் இருந்த 25 பைசா, 50 பைசா போன்றவையும் தற்போது செல்லாத காசுகளாகி விட்டன.
ஆனால் சமீப ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட 10 ரூபாய் நாணயங்களும் செல்லாத காசுகள் பட்டியலில் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமலேயே சேர்த்து உள்ளனர். அதுவும் திருப்பூர், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை வணிகர்கள் முதல் நடத்துனர்கள் வரை வாங்க மறுக்கும் அவலம் உள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி பலமுறை எச்சரிக்கை விடுத்தும் யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. எங்களிடமிருந்து பொதுமக்களோ, பெரு வணிகர்களோ 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. எனவே நாங்கள் வாங்கினால் எங்களிடமே தேங்கி விடுகிறது என்பது சிறுவணிகர்களின் பதிலாக உள்ளது. ஆனால் வணிகர்கள் வாங்காததால் நாங்கள் வாங்குவதில்லை என்பதே பொதுமக்களின் புகாராக உள்ளது. 10 ரூபாய் நாணயங்கள் செல்லாக்காசுகளாக பார்க்கப்படும் நிலைக்கு என்ன தான் காரணம் என்பது குறித்து இந்த கட்டுரையில் அலசலாம்.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் 2005-ம் ஆண்டில் முதல் 10 ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.அதன் பிறகு படிப்படியாக 14 வகையான 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தோற்றத்தில் உள்ளன. குறிப்பாக இந்திய ரூபாய்க்கான குறியீடு இல்லாமலும் ஒருவகை 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அவை போலி நாணயங்கள் என்பதான வதந்தி பொதுமக்களிடையே பரப்பப்பட்டது. எனவே கள்ள நாணயத்தை கையில் வைத்திருந்து நாம் ஏன் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதான அச்சம் பொதுமக்களிடையே எழுந்ததும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் கள்ள நாணயங்கள் உருவாக்குவதற்கு அதிக செலவு பிடிக்கும் நிலையில் ரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் பாதுகாப்பானவையாகவே இருக்கும் என்பது விபரம் அறிந்தவர்களின் கருத்தாக உள்ளது. போலி நாணயங்கள் குறித்த அச்சம் மட்டுமே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதற்கான காரணமாக இல்லாமல் இருக்கலாம். மிகச் சாதாரணமாக 20-க்கும் மேற்பட்ட 10 ரூபாய் காகிதப் பணத்தை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்ல முடியும். ஆனால் 10 ரூபாய் நாணயங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டு செல்வது மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும். இதுவும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயங்களை தவிர்க்க ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்கள் வழக்கம் போல புழக்கத்தில் இருக்கிறது. மேலும் 10 ரூபாய் நாணயத்துடன் உணவகத்துக்குச் சென்று சாப்பிட்டு விட்டு அவமானப்பட்ட நிகழ்வையும் பல ஏழைகள் சந்தித்துள்ளனர்.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் தொழில்கள் முடங்கிய நிலையில் சேமிப்புகள் கரைந்து போக, செல்லாதது என்று மூலையில் வைக்கப்பட்டிருந்த 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு, பசிக்கு உணவு தேடி அலைந்தவர்கள் ஏராளமாக உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக பிச்சைக்காரரின் தட்டில் 10 ரூபாய் நாணயத்தைப் போட்டால் 'ஏம்பா செல்லாத காசை கொடுக்கிறே. .ஒத்தை ரூபா குடுத்தாலும் செல்லற காசா குடு. இல்லேனா இல்லேனு சொல்லி அனுப்பி விடு' என்று கூறி திருப்பிக் கொடுக்கும் அவல நிலை தற்போது உள்ளது.
இப்படி பலவகைகளில் பொதுமக்களை பாடாய் படுத்தும் 10 ரூபாய் நாணயத்தை மீண்டும் புழக்கத்தில் விடுவதற்கு என்னதான் வழி? முதல் கட்டமாக வங்கிகளில் 'இங்கு எல்லா நேரங்களிலும் 10 ரூபாய் நாணயங்கள் வாங்கப்படும்' என்ற அறிவிப்புப் பலகை வைப்பதற்கு உத்தரவிட வேண்டும்.அடுத்த கட்டமாக அனைத்து வணிக நிறுவனங்கள், அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் இந்த அறிவிப்பை ஒட்டுவது கட்டாயமாக்க வேண்டும். ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு புழக்கத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு நாணயத்தையும் வாங்க மறுப்பது குற்றம் என்பதையும் அதற்கு சிறைத்தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடம் உள்ளது என்பது குறித்தும் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்க டோல் ப்ரீ எண்கள் வெளியிட வேண்டும். 'வாயைக் கட்டி வயிற்றை கட்டி சேர்த்து வைத்த சிறுவாட்டுக் காசு செல்லாமல் போச்சே'என்ற வேதனையுடன் 10 ரூபாய் நாணயங்களை வைத்திருக்கும் அடித்தட்டு மக்களின் வேதனைக்கு முடிவு கட்ட வேண்டும்.
இதுகுறித்து உடுமலை எஸ்.வி. புரத்தை சேர்ந்த மளிகை கடை வியாபாரி கே.டி.எஸ்.ராஜா கூறியதாவது:-
5 ரூபாய் நாணயத்தை ஏற்றுக் கொண்ட மக்களால் 10 ரூபாய் நாணயத்தை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனை கையாள்வதில் சிரமம் உள்ளதாக கருதுகிறார்கள்.பொதுமக்கள் எங்களிடம் வாங்க மறுப்பதால் வேறு வழியில்லாமல் நாங்களும் வாங்க மறுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தற்போது 10 ரூபாய் நோட்டுகள் புழக்கமும் குறைவாகவே உள்ளது.அழுக்கடைந்த, சேதமான நோட்டுகள் அதிக அளவில் புழங்குகிறது. இந்த சூழ்நிலையில் 10 ரூபாய் நாணயத்தை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வழி செய்தால் நாங்களும் வாங்கத் தயாராகவே இருக்கிறோம்.
இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறியதாவது:-
அப்துல் பாபு, (துணிக்கடை வியாபாரி):-
10 ரூபாய் நாணயங்களை திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள பஸ்சில் கொடுக்கும்போது வாங்க மறுக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் வெளி இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க யோசிக்கிறார்கள். ஆனால் சென்னை போன்ற இடங்களில் பழைய 5 ரூபாய் தாள் போன்றவற்றைகூட வாங்கி கொள்கிறார்கள்.
என்னிடம் இருந்த மூப்பது 10 ரூபாய் நாணயங்களை கேரளாவிற்கு சென்று மாற்றினேன். எனவே இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
முத்து, (வியாபாரி):-
திருப்பூரில் பஸ்கள், பெரிய கடைகளில்கூட 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. திருநெல்வேலி, தென்காசி, சேலம் போன்ற மற்ற இடங்களில் 10 ரூபாய் நாணயங்கள் பயன்படுத்தப்படுவதால் அங்கே வாங்கி கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஆனால் திருப்பூர் வரும்போது அந்த நாணயத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
செந்தில்பாண்டியன், (கண்டக்டர்):-
என்னிடம் இருக்கும் 10 ரூபாய் நாணயங்களை அலுவலகத்தில் கொடுக்கிறேன். அவர்கள் அதனை வாங்கி வங்கியில் செலுத்துகிறார்கள். எனவே பொதுமக்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்கி பயன்படுத்த முன்வர வேண்டும்.