பள்ளி மாணவர்களுக்கு `புள்ளிங்கோ ஸ்டைலில்' முடிதிருத்த வேண்டாம்
பள்ளி மாணவர்களுக்கு `புள்ளிங்கோ ஸ்டைலில்' முடிதிருத்த வேண்டாம் என்று சலூன் கடைகளுக்கு தலைமை ஆசிரியர் நோட்டீஸ் கொடுத்தார்.
கீரமங்கலம்:
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஸ்டைல் என்ற பெயரில் செய்யும் சிகை அலங்காரம் மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கும் நிலையில் உள்ளதாக பெற்றோர்கள் பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பி வருகின்றனர். இதேபோல கடந்த சில ஆண்டுகளாக கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள் இது போன்ற சிகை அலங்காரம் செய்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஸ்டைலாக சிகை அலங்காரம் செய்து வந்த பல மாணவர்களை அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்த சலூன் கடைகளுக்கே அழைத்துச் சென்று மாணவர்களுக்கு இனிமேல் இது போல சிகை அலங்காரம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தினார்கள். அதே போல கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் பல மாணவர்கள் மாடலாக சிகை அலங்காரம் செய்து வந்ததால் பள்ளி மேலாண்மைக்குழு பள்ளி நிர்வாகத்தின் ஆலோசனைப்படி பள்ளி தலைமை ஆசிரியர் கொத்தமங்கலத்தில் உள்ள சலூன் கடைகளுக்கு ஆலோசனை நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதில், மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் மட்டுமின்றி இந்த சமூகத்திற்கும் அக்கறை உள்ளது. அதில் கூடுதலாக சிகை அலங்கார நிபுணர்களுக்கும் உள்ளது. ஆகவே பள்ளி மாணவர்களுக்கு அழகான முறையில் பள்ளி சூழலுக்கு ஏற்ப சிகை அலங்காரம் செய்ய வேண்டும். மாணவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக புள்ளிங்கோ, பாக்ஸ் கட்டிங், ஒன்சைட் கட்டிங், வீ கட்டிங், ஸ்பைக் கட்டிங் என ஸ்டைலாக சிகை அலங்காரம் செய்ய வேண்டாம். நீங்க செய்ய மறுக்கும் போது யாராவது வாக்குவாதம் செய்தால் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இதனை அனைத்து சலூன் கடைகளும் கடைப்பிடிக்க வேண்டும் என பெற்றோர்கள் கூறுகின்றனர்.