மோசமான விபத்துக்கு வழிவகுக்கக்கூடாது-ஆய்வுக்கூட்டத்தில் திருச்சி கோட்ட மேலாளர் பேச்சு


மோசமான விபத்துக்கு வழிவகுக்கக்கூடாது-ஆய்வுக்கூட்டத்தில் திருச்சி கோட்ட மேலாளர் பேச்சு
x

மோசமான விபத்துக்கு வழிவகுக்கக்கூடாது என்று ரெயில்வேயின் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ்அகர்வால் தெரிவித்தார்.

திருச்சி

மோசமான விபத்துக்கு வழிவகுக்கக்கூடாது என்று ரெயில்வேயின் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ்அகர்வால் தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டம்

திருச்சி ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் சிறப்பு பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்துக்கு ரெயில்வே கோட்ட மேலாளர் மணிஷ்அகர்வால் தலைமை தாங்கினார். கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம், மூத்த கோட்ட பாதுகாப்பு அதிகாரி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி பயிற்சி மையத்தில் நடந்த கூட்டத்தில் கோட்ட மேலாளர் மணிஷ்அகர்வால் ரெயில் ஓட்டுனர்கள், மின்பணியாளர்களை சந்தித்து பேசினார்.

மோசமான விபத்து

அப்போது மணிஷ்அகர்வால் பேசுகையில், திருச்சி கோட்டத்தில் பாதுகாப்பு செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. ஆனாலும் எந்தவித சிக்கலும் ஏற்பட்டுவிடக்கூடாது. ரெயில் சேவையில் சில நிமிட தாமதத்தை பொறுத்து கொள்ள முடியும். ஆனால் மோசமான விபத்துக்கு வழிவகுக்கும் குறுக்கு வழிமுறைகள் போன்ற பாதுகாப்பு மீறல்களை பொறுத்து கொள்ள முடியாது. விபத்தில்லா நிகழ்வை உருவாக்குவதற்கு ஒருங்கிணைந்த பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக இரவுநேரங்களில் அதிகாரிகளின் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார்..

பரிசுகள்

இதனை தொடர்ந்து பாதுகாப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு 3 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரெயில் செயல்பாடுகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சிறந்த 3 ஆலோசனைகள் கேட்கப்பட்டு அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து கூட்டு பயிற்சி நடத்தப்பட்டு, விபத்து மீட்பு ரெயில் மற்றும் மீட்பு உபகரணங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


Next Story