'எதுவும் தெரியாமல் நிதி மேலாண்மை, பொருளாதாரம் குறித்து பேச கூடாது'-ஆர்.பி.உதயகுமாருக்கு, நிதி அமைச்சர் பதிலடி


எதுவும் தெரியாமல் நிதி மேலாண்மை, பொருளாதாரம் குறித்து பேச கூடாது-ஆர்.பி.உதயகுமாருக்கு, நிதி அமைச்சர் பதிலடி
x

மூச்சு காற்றை நிறுத்தி, காற்றை சேமித்தேன் என்பதா?. நிதி மேலாண்மை, பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாமல் பேச கூடாது என்று ஆர்.பி.உதயகுமாருக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.

மதுரை

மூச்சு காற்றை நிறுத்தி, காற்றை சேமித்தேன் என்பதா?. நிதி மேலாண்மை, பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாமல் பேச கூடாது என்று ஆர்.பி.உதயகுமாருக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.

எனது திறமை

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியலில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு திறமை மற்றும் அனுபவத்தோடு வருவார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை பல காரணங்கள் எனக்கு இருக்கின்றன. அது எனது வரம். உலக அளவில் பல கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று இருக்கிறேன். பெரிய நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறேன். 30 ஆண்டு கால அனுபவத்திற்கு பின் அரசியலுக்கு வந்து இருக்கிறேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எனக்கு கொடுத்த நிதி அமைச்சர் பணியினை நான் சிறப்பாக செய்கிறேன் என கருதுகிறேன்.

அப்பட்டமான பொய்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் மூச்சு காற்றை நிறுத்தி, காற்றை சேமித்தேன் என சில கருத்துகளை கூறி உள்ளார். மேலும் அவர் மின் கட்டணம், சொத்து வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் அரசின் வருவாய் பற்றாக்குறை குறைந்து இருப்பதாக கூறுகிறார். நான் கேட்கிறேன், மின் கட்டணம்-சொத்து வரி வருமானம் மாநில அரசுக்கா வரப்போகிறது. அதுவும் இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்ட கட்டணம், எப்படி கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க செய்யும். இது என்ன கணக்கு. அ.தி.மு.க. அரசின் தாலிக்கு தங்கம், விலையில்லா மடிக்கணினி, இருசக்கர வாகனம் திட்டம் போன்ற திட்டங்களை தி.மு.க. நிறுத்தி விட்டதாக கூறுகிறார். இது அப்பட்டமான பொய். அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் இந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்த வில்லை.

எதுவும் தெரியாது

இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஒதுக்கிய நிதியை அப்படியே பெண்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கும் திட்டத்திற்கு செலவு செய்கிறோம். தவறான விவரங்களை சொல்வது சரியில்லை. இது எல்லாம் அரசியலில் ரொம்ப தவறுங்க. உங்களுக்கு (அ.தி.மு.க.) செயல்திறன் இல்லை. நிதி மேலாண்மை தெரியவில்லை. அரசு கடன் வாங்கினால் முதலீட்டுக்கு தான் போட வேண்டும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசு நிர்ணயித்த தொகையை விட ஒளிவுமறைவுடன் ரூ.30 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசு அனுமதித்து இருக்கும் கடன் அளவை விட குறைவாக தான் கடன் வாங்கி இருக்கிறோம். எனது அனுபவத்தின் பலனாக 4.61 சதவீதமாக இருந்த வருவாய் பற்றாக்குறையை 3.35 சதவீதமாக குறைத்து இருக்கிறேன். ஆர்.பி.உதயகுமாருக்கு, கணக்கு, சட்டம், அடிப்படை பொருளாதாரம், நிதி மேலாண்மை என எதுவும் தெரியாது. அரசியலில் தனது இருப்பை தக்க வைக்க இது போன்று பேசி கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story