டாஸ்மாக் கடையில் இரட்டைக்கொலை; மது குடிக்க பணம் தராததால் வாலிபர் வெறிச்செயல்
புதுவண்ணாரப்பேட்டையில் மது குடிக்க பணம் தராததால் டாஸ்மாக் கடையில் 2 பேரை வெட்டிக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுவண்ணாரப்பேட்டை,
சென்னை எண்ணுரில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கோழிசெல்வம் (வயது 32). அதே பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (24). நண்பர்களான இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் திருவொற்றியூர் டோல்கேட் எம்.ஜி.ஆர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இருவரும் சென்றனர். அங்கு மது வாங்கி இருவரும் அருந்தினர்.
இதில் இருவருக்கும் போதை தலைக்கேறியது. இருந்தாலும் கூடுதலாக மது அருந்த வேண்டும் என்று கோழிசெல்வம் ஆசைப்பட்டுள்ளார்.
கத்திக்குத்து
ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லை. இதனால் அருகில் இருந்த நண்பர் மனோஜிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் மது அருந்தியது போதும், நான் பணம் தர மாட்டேன் என்று கூறியுள்ளார்
இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கோழி செல்வம், மறைத்து வைத்திருந்த கத்தியால் மனோஜை சரமாரியாக குத்தினார்.
கடுமையாக குத்தியதால் வயிற்றில் இருந்து ரத்தம் வெளியேறியது. ரத்த வெள்ளத்தில் குடல் சரிந்து கீழே விழுந்தார்.
தட்டிக்கேட்டவர் மீதும் தாக்குதல்
இந்த கொடூர சம்பவம் நடந்ததை டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வந்த புது வண்ணாரப்பேட்டை ஏ.இ.கோவில் தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் திருவேங்கடம் (55) என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் கோழிசெல்வத்தை தட்டிக் கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் திருவேங்கடத்தையும் கோழி செல்வம் கத்தியால் குத்தினார். இதில் அவரும் பலத்த காயம் அடைந்து கீழே சரிந்து விழுந்தார். இதனை பார்த்த சக மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் டாஸ்மாக் கடையே பரபரப்பாக காணப்பட்டது.
இரட்டைக்கொலை
பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் புது வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவி்த்தனர். உடனே சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த மனோஜையும், திருவேங்கடத்தையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இதனையடுத்து இரட்டைக்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
வாலிபர் கைது
இதற்கிடையே 2 பேரையும் கொலை செய்த கோழி செல்வம் பஸ்சில் ஏறி தப்ப முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடையில் பட்டப்பகலில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.