இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.24½ லட்சம் மோசடி; 7 பேர் மீது வழக்கு


இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.24½ லட்சம் மோசடி; 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 April 2023 2:15 AM IST (Updated: 20 April 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.24½ லட்சம் மோசடி செய்த 7 பேர் மீது தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

கம்பத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.24½ லட்சம் மோசடி செய்த 7 பேர் மீது தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரட்டிப்பு பணம்

தேனி மாவட்டம் கம்பம் எல்.எப். சாலை பகுதியை சேர்ந்தவர் பாலஸ்ரீனிவாசன் (வயது 51). இவருடைய செல்போனுக்கு டெலிகிராம் செயலியில் உள்ள ஒரு குழுவில் குறுஞ்செய்தி வந்தது. அதில், ஒரு தனியார் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு அதில் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் வரை முதலீடு செய்யலாம் என்றும், முதலீடு செய்தால் 150 நாட்களில் இந்திய மதிப்பிலும், கிரிப்டோ கரன்சியிலும் 2 மடங்கு பணம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

அதில், கொடுக்கப்பட்ட எண்ணில் பாலஸ்ரீனிவாசன் தொடர்பு கொண்டார். அவரிடம் அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் என்று கூறி சிலர் பேசினர். பின்னர் அவர்கள் மதுரை, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஆகிய இடங்களில் நடத்திய நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்துகொண்டார். அப்போது அந்த நிறுவனம் பல ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும், நல்ல லாபம் கிடைப்பதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினர்.

ரூ.24½ லட்சம் மோசடி

இதையடுத்து ஆன்லைன் மூலம் அந்த நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் பயனர் கணக்குகள் தொடங்கி பணம் முதலீடு செய்ய வேண்டும் என்றனர். அதை நம்பிய பாலஸ்ரீனிவாசன் தனது பெயரும், தனது நண்பர்கள், உறவினர்கள் என மொத்தம் 52 பேரின் பெயரில் பயனர் கணக்குகளை தொடங்கினார். அவற்றில் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தார். ஆனால், அதற்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை. அவர் முதலீடு செய்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார்.

7 பேர் மீது வழக்கு

அதன்பேரில், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த தனியரசன், லதா, பிரகாஷ், டேனியல் சந்தோஷ், பாலா என்ற பாலமுருகன், பாலாஜி, செல்வராஜ் ஆகிய 7 பேர் மீது சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story