தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்கள் ஒருவரும் விடுபடாமல் கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்: கலெக்டர்


தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின  மாணவர்கள் ஒருவரும் விடுபடாமல் கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்: கலெக்டர்
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்கள் ஒருவரும் விடுபடாமல் கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஒருவரும் விடுபடாமல் கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

கண்காணிப்புகுழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஒவ்வொரு காலாண்டிலும் நடைபெறும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டம் மற்றும் பற்றாளர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்வி உதவித்தொகை

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:-

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஒருவருக்கும் விடுபடாமல் முழுமையாக நிதி ஒதுக்கீடு பெற்று செலவு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு கல்லூரி மற்றும் கல்லூரி விடுதியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். இலவச சைக்கிள் வழங்க ஒவ்வொரு பள்ளி வாரியான பட்டியல் பெற வேண்டும். இணையவழி பட்டா நிலமில்லாத தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த நபர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, உதவி கலெக்டர்கள் சிவசுப்பிரமணியன் (தூத்துக்குடி), மகாலட்சுமி (கோவில்பட்டி), புஹாரி (திருச்செந்தூர்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் குழு சார்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


Next Story