டாக்டர் ராமதாசின் 'தமிழைத்தேடி' பரப்புரை பயணம்: சென்னையில் 21-ந்தேதி தொடங்குகிறார்
பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர் ராமதாஸ் ‘தமிழைத்தேடி' என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தை சென்னையில் இருந்து வருகிற 21-ந்தேதி தொடங்குகிறார்.
சென்னை,
தமிழ் மொழியை காப்பதற்காக 'தமிழைத்தேடி...' என்ற தலைப்பில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை முதல் மதுரை வரை பரப்புரை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 'எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்...' என்பதுதான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனால். இன்று எங்கே தமிழ்? என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது. கோவில்களில், ஐகோர்ட்டில், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில், வீடுகளில், தாய்க்கும் சேய்க்குமான உரையாடல்களில் என எதிலும் தமிழ் இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையினரின் விருப்பமாகவும், நோக்கமாகவும் உள்ளது.
பரப்புரை பயணம்
தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், நோக்கத்தையும் நிறைவேற்றும் வகையில், அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத்தமிழை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும், பள்ளிகளில் தொடங்கி கோவில்கள் வரை எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21-ந்தேதி உலக தாய்மொழி நாளில் சென்னையில் தொடங்கி மதுரை வரை தமிழைத்தேடி பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பரப்புரை பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது மறைமலைநகரில் முடிகிறது. மறுநாள்(22-ந்தேதி) மதுராந்தகத்தில் தொடங்கி திண்டிவனத்தில் நிறைவுபெறுகிறது. 23-ந்தேதி புதுச்சேரியில் தொடங்கி கடலூரிலும், 24-ந்தேதி சிதம்பரம் தொடங்கி மயிலாடுதுறையிலும், 25-ந்தேதி குற்றாலம் தொடங்கி கும்பகோணத்திலும் நிறைவுபெறுகிறது. 26-ந்தேதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நிறைவடைகிறது. 27-ந்தேதி வல்லம் தொடங்கி திருச்சியிலும், 28-ந்தேதி திண்டுக்கல்லில் தொடங்கி மதுரையில் இறுதியாக இப்பயணம் நிறைவுபெறுகிறது.
கடமையை நிறைவேற்ற...
இந்த விழிப்புணர்வு பரப்புரை பயணம் அரசியல் கலப்பற்ற, அரசியல் நோக்கமற்ற பயணமாகும். தாயை காப்பது போல், தமிழர்களாக பிறந்த அனைவருக்கும் அன்னை மொழியான தமிழ்மொழியை காக்க வேண்டியதும் கடமை ஆகும். அந்தக்கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை தொடங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.