திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி நாள் விழா
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்:
"வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்க வேண்டும்" என்று திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி நாள் விழாவில் சென்னை வெரிசோன் டேட்டா சர்வீசஸ் நிறுவன அதிகாரி சந்திரசேகர் பேசினார்.
கல்லூரி நாள் விழா
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கல்லூரி நாள் விழா நேற்று மாலையில் நடந்தது. ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி ஆண்டறிக்கை வாசித்தார்.
சென்னை வெரிசோன் டேட்டா சர்வீசஸ் நிறுவன சாப்ட்வேர் டெவலப்மென்ட் மூத்த மேலாளர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
அப்போது அவர் கூறியதாவது:-
புதிய தொழில்நுட்பங்கள்
மாணவர்கள் நேர்மறையான எண்ணங்களுடன் செயல்பட வேண்டும். தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களையும் கற்று கொள்ள வேண்டும். தற்போது நாளுக்கு நாள் புதிய பாடத்திட்டங்கள் மாறி வருகின்றன. அதற்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்களை தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்ேபாதுதான் வாழ்வில் பல சாதனைகளை புரிந்து வெற்றிவாகை சூட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆண்டு மலர் வெளியீடு
பின்னர் அவர் கல்லூரி ஆண்டு மலரை வெளியிட, அதனை ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் பெற்று கொண்டார். கல்லூரியில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த பேராசிரியர்களுக்கும், டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும் பதக்கம் மற்றும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை மாணவி நிவேதாவுக்கு சிறந்த மாணவிக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜீலா மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சிவில் துறை தலைவர் தமிழரசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கல்லூரி செயலாளர் நாராயண ராஜன் நன்றி கூறினார்.