டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான வினாடி-வினா போட்டி


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில்  பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான வினாடி-வினா போட்டி
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான வினாடி-வினா போட்டி வருகிற 14-ந்தேதி நடக்கிறது

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான வினாடி-வினா போட்டி வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

வினாடி-வினா போட்டி

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பயின்றோர் கழகம் சார்பில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவிலான வினாடி-வினா போட்டி வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

பள்ளி மாணவர்களின் பொது அறிவு மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாநில அளவிலான இந்த போட்டியில் முதலிடம் பெறும் பள்ளிக்கு சிவந்தி சுழற்கோப்பையுடன் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். 2, 3-வது இடம் பெறும் அணிகளுக்கு முறையே ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.

தகுதிச்சுற்று

தமிழகத்தில் உள்ள 8 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஒவ்வொரு பள்ளியும் 2 மாணவர்கள் அல்லது மாணவிகளை போட்டிக்கு அனுப்பலாம். போட்டியில் கலந்து கொள்ள பதிவு கட்டணம் கிடையாது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் தலைமை ஆசிரியரிடம் பள்ளி மாணவர்களுக்கான சான்றிதழ் பெற்று வர வேண்டும்.

தகுதி சுற்றில் உள்ள அணிகளை தேர்ந்தெடுக்க வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் எழுத்து தேர்வு நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகளில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 6 அணிகளுக்கு தகுதி சுற்றும், மாலையில் இறுதி சுற்றும் நடைபெறும்.

பரிசளிப்பு

அடிப்படை அறிவியல், நாட்டு நடப்பு, அடிப்படை கணிதம் மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். போட்டியில் முதல் 3 இடங்களை பெறும் அணிகளுக்கு போக்குவரத்து செலவு அளிக்கப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு கல்லூரி நாள் விழாவில் சுழற்கோப்பையும், ரொக்கப்பரிசுகளும் வழங்கப்படும்.

போட்டியில் பங்குபெற விரும்பும் மாணவ-மாணவிகள் தங்களது பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி (தொலைபேசி எண்ணுடன்) ஆகிய விவரங்களை எழுதி, தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் 'முதல்வர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, திருச்செந்தூர்-628215, தூத்துக்குடி மாவட்டம்' என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04639-220700 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தெரிவித்துள்ளார்.


Next Story