தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க வடிகால் வசதி செய்ய வேண்டும்
கனமழையிலிருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவுறுத்தியுள்ளார்
கனமழையிலிருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வடிகால் வசதி
திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள், வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை மற்றும் காற்றிலிருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க தக்காளி, கத்தரி, வெங்காயம், வெண்டை, மிளகாய் மற்றும் கொடி வகை காய்கறி பயிர்களுக்கு நல்ல வடிகால் வசதி, மழைநீர் தேங்காத வண்ணம் அமைக்க வேண்டும். முன் தடுப்பு நடவடிக்கையாக பூஞ்சான உயிரியில் கட்டுப்பாட்டு மருந்துகளை மண் மூலமாகவும், இலை வழியாகவும் தெளிக்க வேண்டும்.
மா, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்துபோன மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் கிடைக்கும்படி கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். தேவையான அளவில் வடிகால் வசதி செய்தல் வேண்டும். கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பிருப்பின் உடனடியாக வேர் பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும்.
மண் அணைக்க வேண்டும்
வாழை பயிரினை பாதுகாக்க மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்திட வேண்டும்.
நீர் பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். உபரிநீர் வடிந்தபின் நடவு, விதைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கலாம். இதேபோல் இதர தோட்டக்கலை பயிர்களில் அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்காத வண்ணம் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.