கடலூர் மாநகராட்சி 18-வது வார்டில் கிடப்பில் போடப்பட்ட வடிகால் அமைக்கும் பணி புத்துயிர் பெறுமா?


கடலூர் மாநகராட்சி 18-வது வார்டில் கிடப்பில் போடப்பட்ட வடிகால் அமைக்கும் பணி புத்துயிர் பெறுமா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கடலூர்


கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் தினந்தோறும் ஒவ்வொரு வார்டுகளின் குறைகள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 18-வது வார்டில் உள்ள குறைகள் குறித்து பார்ப்போம்...

கெடிலம் ஆறு

கடலூர் மாநகராட்சி 18-வது வார்டில் மணலி எஸ்டேட், வேல் நகர், வள்ளி கந்தன் நகர், ரங்கநாதன் தெரு, மரிய சூசை நகர், தங்கவதி நகர், அய்யாகண்ணு அவென்யூ, பாடலீஸ்வரர் நகர், விநாயகர் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, புதுப்பாளையம் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த வார்டில் 900-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

மழைக்காலம் தொடங்கினாலே மஞ்சக்குப்பம் பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் மணலி எஸ்டேட் பகுதி வழியாக தான் சென்று கெடிலம் ஆற்றில் கலக்கிறது. மேலும் கெடிலம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போதெல்லாம் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. அதனால் மழைநீரை வெளியேற்றும் வகையில் இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.

கிடப்பில் போடப்பட்ட வடிகால் பணி

இதில் இன்னும் பெரும்பாலான இடங்களில் பணிகள் முடிவடையவில்லை. கிடப்பில் போடப்பட்ட வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியால், மழைக்காலங்களில் மழைநீர் வழிந்து செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியிலேயே தேங்கி நிற்கிறது. மேலும் பல இடங்களில் அமைக்கப்பட்ட வடிகால் மிகவும் குறுகிய வாய்க்காலாக உள்ளது. இதனால் அதில் போதிய அளவில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது.

மேலும் சிறுவர் பூங்கா அமைப்பதற்காக அப்பகுதியில் போதிய இடவசதி உள்ளதாகவும், அதனால் அங்கு நவீன வசதிகளுடன் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கரும காரிய கொட்டகை

இது தவிர வேல்நகர், மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். மேலும் கரும காரிய கொட்டகை இருந்தும், அதனை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த கட்டிடத்துக்குள் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

ரேஷன் கடை

18-வது வார்டு பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் கூறுகையில், எங்கள் பகுதியில் ரேஷன் கடைக்கு கூட சொந்த கட்டிடம் இல்லை. வாடகை கட்டிடத்தில் தான் ரேஷன் கடை இயங்கி வருகிறது. மேலும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் என்பது முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. மழைக்காலம் தொடங்கி விட்டாலே மணலி எஸ்டேட் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக தான் காட்சியளிக்கிறது. காரணம், வடிகால் வாய்க்கால் கட்டும் பணி பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது தான். அதனால் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதுடன், கிடப்பில் போடப்பட்ட வடிகால் வாய்க்கால் பணிகளை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

அங்கன்வாடி மையம்

இதுகுறித்து வள்ளி கந்தன் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறுவதற்கு வசதியாக முறையான வடிகால் வாய்க்கால் இல்லை. அதனால் மழைக்காலங்களில் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் அனைத்தும் மோட்டார் மூலமாகவே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் வன்னியர்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. அதனால் குழந்தைகளை அங்கு அனுப்பவே அச்சமாக உள்ளது. ஆகவே அந்த கட்டிடத்தையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story