சுடுகாட்டில் சாம்பலை பூசி நடித்த நாடக கலைஞருக்கு தீக்காயம்
வந்தவாசி அருகே சுடுகாட்டுக்கு சென்று உடலில் சாம்பல பூசி நடித்துக்கொண்டிருந்த நாடக கலைஞர், தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வந்தவாசி
வந்தவாசி அருகே சுடுகாட்டுக்கு சென்று உடலில் சாம்பல பூசி நடித்துக்கொண்டிருந்த நாடக கலைஞர், தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாடக நடிகர்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் புது காலனியைச் சேர்ந்த திருமலை மகன் அருண்குமார் (வயது 18). நாடக நடிகரான இவர் தனது குழுவினருடன் பல்வேறு ஊர்களுக்கு சென்று வரலாற்று நாடகங்களில் நடித்து வருகிறார்.
அதன்படி இவர், சக நாடக நடிகர்களுடன் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பழவேரி கிராமத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு வந்தார்.
கிராமத்தில் 'சிவகங்கை திருமணம்' என்ற நாடகத்தில் பார்வதி வேடமிட்டு அருண்குமார் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது சுடுகாட்டு சாம்பலை உடலில் பூசி நடிக்கும் காட்சிக்காக நள்ளிரவு கிராம மக்கள் சுமார் 30 பேருடன் அந்த கிராம சுடுகாட்டுக்கு சென்றார்.
விபரீதம்
அங்கு பிணம் எரிக்கப்பட்ட சாம்பலை பூசிய அவர் அங்கிருந்து ஓடி வருவதுபோன்று நடித்து கொண்டிருந்தார்.அப்போது அருகில் கையில் தீப்பந்தம் வைத்திருந்த மற்றொரு நாடக நடிகர் சாகசம் செய்வதாக வாயில் மண்எண்ணைய்யை ஊற்றி தீப்பந்தத்தை நோக்கி ஊதினார். அப்போது வாயிலிருந்து தீ பிடித்து பறப்பதுபோல் இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அருண்குமார் மீது தீப்பற்றியது.
பலத்த தீக்காயமடைந்து அலறிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணை
இதுகுறித்து நாடக நிறுவன உரிமையாளரான செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த கப்பிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் தெள்ளார் போலீசில் புகார் அளித்தார். அது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்எண்ணெயை வாயில் ஊற்றி தீ்ப்பந்தத்தை வைத்து சாகசம் செய்யக்கூடாது என ஏற்கனவே தடை உள்ளது. தடையை மீறி விபரீத சாகசங்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவத்தின் போதுதான் அதுவும் நாடகம் நடித்துக்கொண்டிருந்த நாடக நடிகரே தீக்காயம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.