திரவுபதி அம்மன் கோவில் சுவரில் துளையிட்டு உண்டியல் திருட்டு
வேப்பூர் அருகே திரவுபதி அம்மன் கோவில் சுவரில் துளையிட்டு உண்டியலை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிறுபாக்கம்
சுவரில் துளை
வேப்பூர் தாலுகா சிறுபாக்கம் அடுத்த பனையாந்தூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் பூசாரி கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலையில் கோவிலின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டு இருந்தது. இதைபார்த்து அதிா்ச்சியடைந்த பக்தர்கள், இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
உண்டியல் திருட்டு
அதன்பேரில் சிறுபாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கோவில் அருகே உள்ள ஏரிக்கரையில் உண்டியல் கிடந்தது. ஆனால் உண்டியலில் காணிக்கை பணம் இல்லை.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவில் முன்பக்க கதவின் பூட்டை மர்மநபர்கள் உடைக்க முயன்றனர். ஆனால் உடைக்க முடியாததால், கோவிலின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்து அங்குள்ள உண்டியலை திருடி வந்துள்ளனர். பின்னர் அந்த உண்டியலை ஏரிக்கரையில் வைத்து உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.