தி.மு.க.மகளிரணி, மாணவரணியினருக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்


தி.மு.க.மகளிரணி, மாணவரணியினருக்கு திராவிட மாடல்   பயிற்சி பாசறை கூட்டம்
x

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மகளிர் அணி, மாணவர் அணியினருக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் சனிக்கிழமை முதல் 2 நாட்கள் நடக்கிறது என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மகளிர் அணி, மாணவர் அணியினருக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நாளை(சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் நடக்கிறது.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாசறை கூட்டம்

தி.மு.கழக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக "திராவிட மாடல்பயிற்சி பாசறைக் கூட்டங்கள்" நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மகளிரணி மற்றும் மாணவரணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கில் மாவட்ட பொறுப்பாளராகிய என்னுடைய தலைமையில், மாநகர செயலாளா் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், மாநகர மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது. இதில் மாநில திட்டக்குழு துணைத்தலைவா் ஜெயரஞ்சன், தி.மு.க. மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளா் ராஜீவ்காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

கோவில்பட்டி

அதேபோன்று கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சத்திய பாமா திருமண மண்டபத்தில் என்னுடைய தலைமையில் கோவில்பட்டி நகரசபை தலைவா் கா.கருணாநிதி மற்றும் ஒன்றிய கழகச் செயலாளா்கள் முன்னிலையில் நடக்கிறது. கூட்டத்தில் தி.மு.க. மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளா் ராஜீவ்காந்தி, தலைமை கழக பேச்சாளா் பர்வீன் சுல்தானா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு விளாத்திகுளம் என்.கே.எஸ். அக்கம்மாள் திருமண மண்டபத்தில் என்னுடைய தலைமையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினா் ஜி.வி.மார்க்கண்டேயன் மற்றும் ஒன்றிய கழகச் செயலாளா்கள் முன்னிலையில் நடக்கிறது. கூட்டத்தில் கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளா் ராஜீவ்காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். அனைத்து கூட்டங்களிலும் மாநில மகளிரணிச் செயலாளா் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவதாக இருந்தது. அவருக்கு கொரானோ தொற்று ஏற்பட்ட காரணத்தால் அவரால் இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை.

மேலும் இளைஞரணியினருக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவிக்கும் தேதியில் நடைபெறும். எனவே மாணவர் அணியினர், மகளிர் அணியினர் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story