திராவிடர் கழகம் சார்பில் முப்பெரும் விழா


திராவிடர் கழகம் சார்பில் முப்பெரும் விழா
x

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர்கழகம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதில் கி.வீரமணி, கனிமொழி எம்.பி., அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர்கழகம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதில் கி.வீரமணி, கனிமொழி எம்.பி., அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

முப்பெரும் விழா

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், திராவிடர் கழக முன்னோடி ஏ.டி.கோபால் நூற்றாண்டு விழா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி 90-வது பிறந்தநாள் விழா, 60 ஆண்டு விடுதலை நாளேட்டிற்கு சந்தா வழங்கும் விழா என முப்பெரும் விழா திருப்பத்தூர் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன் வரவேற்றார். திராவிடர் கழக துணைத் தலைவர் கலி பூங்குன்றம் தொடக்க உரை நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை

பேராசிரியர் அன்பழகன் தமிழ் மண்ணுக்காகவும், தமிழ் மொழிக்கவும், தந்தை பெரியாரின் பகுத்தறிவை வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் அயராது பாடுபட்டார். கலைஞர் தனக்கு ஆலோசனை வேண்டும் என்றால் பேராசிரியரைத் தான் அழைப்பார். எந்த ஒரு முடிவை எடுத்தாலும் பேராசிரியரின் கருத்தை கேட்காமல் கலைஞர் முடிவெடுக்க மாட்டார். பொது வாழ்வில் வந்துவிட்டால் வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை என்று அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என பேராசிரியர் கூறினார். அதையே நான் இன்றும் பின்பற்றி வருகிறேன்.

புதிய கல்வி கொள்கை என்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதனால் மீண்டும் அடிமை தனத்திற்கு மக்களை எடுத்துச் செல்கிறது. ஒருவர் மட்டுமே ஒரு பள்ளியில் படித்தால் கூட அந்தப் பள்ளி இயங்க வேண்டும் என்பது திராவிட ஆட்சியின் மாடல். ஆனால் புதிய கொள்கை என்ற திட்டத்தில் அனைவரையும் ஒரே இடத்தில் கொண்டு வர வேண்டுமென பள்ளிகளை மூடச் சொல்கிறது.

இந்த சமூகத்தையும், மண்ணையும் காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பிராமண சமூகத்தினர் அதிகம் இருந்த காலத்தில் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது தி.மு.க. தற்போது தமிழகம் அனைத்து துறையிலும் முதலிடம் என தனியா பத்திரிகை ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றார்.

அனைத்துத் துறைகளிலும்

கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தவர் மு.க.ஸ்டாலின். ஆனால் பா.ஜக. ஆட்சி நடத்தும் மாநிலங்களில் 30 சதவிதம் கூட கொடுக்கப்படவில்லை. சமஸ்கிருதம் படித்தால் தான் டாக்டர் ஆக முடியும் என்ற நிலை இருந்தது. பின்னர் அனைத்து துறைகளிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் வர காரணமாக இருந்தது பெரியார்தான். தற்போது நீட் கொண்டு வந்து அதனை தடுக்க பார்க்கிறது பா.ஜ.க. அரசு. பிப்ரவரி மாதம் முதல் அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மதவாத சக்திகளை தமிழகத்தில் வராமல் தடுக்க பிரசாரம் செய்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆளுர் ஷானவாஸ் எம்.எல்.ஏ., சி.என்அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ஏ.நல்லதம்பி, தேவராஜ், வில்வநாதன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் வி.ஜி.இளங்கோ நன்றி கூறினார்.


Next Story