கலையும் நிலையில் கனவுத் திட்டம்:முடங்கிக் கிடக்கும் வைகை நெசவு பூங்கா பணி:விரக்தியில் நெசவாளர்கள்


கலையும் நிலையில் கனவுத் திட்டம்:முடங்கிக் கிடக்கும் வைகை நெசவு பூங்கா பணி:விரக்தியில் நெசவாளர்கள்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெசவாளர்களின் கனவு திட்டமான வைகை நெசவு பூங்கா அமைக்கும் திட்டப் பணிகள் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன.

தேனி

தொழில்புரட்சி என்பதே வளர்ச்சியை நோக்கிய பயணமாக அமையும். உலக நாடுகளோடு போட்டியிட்டு நம்நாடும் உயர வேண்டும் என்றால் தொழில் புரட்சி அவசியம்.

தொழில் வீழ்ச்சி

தொழில்வளம் பெருகினால், நாட்டின் வளம் பெருகும். தொழில் வளம் அதிகரித்தால் தான் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையில்லாத திண்டாட்டத்தை குறைப்பதற்கு தொழில்வளம் பெருக வேண்டும்.

தொழில்புரட்சி ஏற்பட்டு தொழில் வளம் பெருக வேண்டும் என்ற கட்டாயத்தில் நாடே இருக்கையில், தேனி மாவட்டத்தில் தொழில்வளம் நாளுக்கு நாள் நசுங்கி வருகிறது. தொழிற்சாலைகள் மூடப்படுவதும், ஆலைகள் மூடப்படுவதும் தொழில் வளம் நசிவுக்கு காரணமாய் அமைந்து உள்ளது.

மூடப்பட்ட ஆலைகள்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தேனி மாவட்டம் தொழில் வளத்தில் அதிகம் பின்தங்கி உள்ளது. வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டிய நிலையில் இந்த மாவட்டம் வீழ்ச்சியை நோக்கி தள்ளப்பட்டு வருகிறது. நூற்பு ஆலைகள், பஞ்சாலைகள், எண்ணெய் ஆலைகள், பருப்பு ஆலைகள் என சுமார் 40-க்கும் மேற்பட்ட ஆலைகள், தொழில்நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளில் மூடப்பட்டு உள்ளன.

அதேவேளையில் புதிய தொழில் நிறுவனங்கள் வருகை, விரிவாக்கம் என்பது அத்திப் பூத்தாற் போல் உள்ளது. இருந்த தொழில்வளம் இழக்கப்பட்டு உள்ளதே தவிர, விரல் விட்டு எண்ணும் அளவுக்கு கூட தொழில் வளம் பெருகவில்லை. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழில்புரட்சி ஏற்படாத நிலையில், இருந்த வேலைவாய்ப்புகளையும் இழந்துள்ள வகையில் தொழிலில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

வைகை உயர்தொழில் நெசவு பூங்கா

வீழ்ச்சி அடையும் தொழில்களில் நெசவுத் தொழிலும் அடங்கும். நாளுக்கு நாள் இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. ஆண்டிப்பட்டி, சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் போன்ற பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் குடும்பங்கள் உள்ளன. கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களாக இவர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமே நெசவுத் தொழில் தான்.

தொழில் நலிவடைந்து வருவதால் இந்த பகுதியில் நெசவு தொழிலை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை வைத்தனர். கடந்த 2004-ம் ஆண்டு நெசவாளர்கள் வைத்த கோரிக்கையை தொடர்ந்து அப்போதைய ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாகவும், தமிழக முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா, நெசவாளர்களின் துயர் துடைக்கும் வகையில் வைகை உயர்தொழில் நெசவு பூங்கா அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்.

முட்டுக்கட்டை

சுமார் ரூ.100 கோடி செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியில் சாமியார் தோட்டம் என்ற பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டன. இங்கு நெசவு பூங்கா அமைக்க 2004-ம் ஆண்டு ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் நடந்த நிகழ்ச்சியின்போது ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

இங்கு உயர் தொழில்நுட்பம் கொண்ட நெசவுக்கூடங்கள், சைசிங், வார்பிங் யூனிட் போன்றவை அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான கட்டிட பணிகள் தொடங்கின. ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பில் கட்டிட வேலைகள் தொடங்கப்பட்டன. தமிழக அரசு இந்த திட்டத்திற்கு ரூ.4 கோடியே 35 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்த தொகை வைப்பு நிதியாக வைக்கப்பட்டது. மீதம் தொகைக்கு வங்கிகளில் கடன் கோரி முதலீட்டாளர்கள் விண்ணப்பித்தனர். ஆனால், எவ்வித கடன் உதவியும் வழங்க வங்கிகள் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது, நெசவுப் பூங்கா அமைக்கும் பணிக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது.

பணிகள் முடங்கின

மேலும், கட்டிடங்கள் அமைக்கும் பணியும் பாதியில் நின்றுவிட்டன. தொழிற்கூடங்களுக்காக பிரமாண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் நின்று விட்டன. மீண்டும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. தமிழக அரசு இந்த திட்டத்தை அறிவித்த போது, நெசவாளர்கள் தங்களின் கனவு நிறைவேறப் போவதாக எண்ணி மகிழ்ந்தனர். நெசவாளர்களின் கனவு திட்டமாக கருதப்பட்ட இந்த திட்டம் தற்போது கலையும் நிலையில் உள்ளது.

அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 18 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்னமும் இந்த திட்டத்தில் 40 சதவீத பணிகள் கூட பூர்த்தி அடையவில்லை. பணிகள் முடங்கிக் கிடப்பதால், திட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நெசவாளர்களும் கவலை அடைந்து உள்ளனர். முதலீட்டாளர்களும் இத்திட்டத்தில் இருந்து பின்வாங்கிய நிலையில், இத்திட்டம் கைவிடப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

வாழ்வு கிடைக்குமா?

கோடிக்கணக்கில் நிதியை செலவு செய்து கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கிய நிலையில், கட்டுமான பணிகளும் நிறைவடையாமல், திட்டப் பணிகளும் முடங்கிக் கிடக்கிறது. தற்போது இந்த பகுதி சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி வருகிறது. இது, நெசவாளர்களின் வேதனையை மேலும் அதிகரித்து உள்ளது.

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், நலிவடைந்து வரும் தொழிலை காக்கவும் இந்த உயர் தொழில் நெசவு பூங்கா அவசியத் தேவையாக உள்ளது. எனவே, முடங்கிக் கிடக்கும் இந்த திட்டத்திற்கு மறுவாழ்வு கிடைக்குமா? என்று நெசவாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து நெசவாளர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

வேலை வாய்ப்பு

சென்றாயபெருமாள் (தேனி மாவட்ட நெசவாளர் சங்க பொது செயலாளர், ஆண்டிப்பட்டி):-

கடந்த 2004-ம் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டிக்கு வந்த போது, சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.96 கோடி மதிப்பில் உயர்தொழில்நுட்பு விசைத்தறி பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த 5 ஆயிரம் நெசவாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

இதனால் நெசவாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மத்திய, மாநில அரசுகள் மற்றும் உற்பத்தியாளர்களின் பங்களிப்போடு இந்த திட்டத்தினை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முதற்கட்டமாக 7 நெசவு கூடம் கட்டப்பட்டது. அதன்பின்னர் அந்த பணிகள் அப்படியே நின்றுவிட்டது. ஆண்டிப்பட்டி பகுதி நெசவாளர்களின் கனவு திட்டமான உயர்தொழில்நுட்ப பூங்கா தற்போது வரையில் எட்டாகனியாகவே உள்ளது.

காட்சி பொருளான கட்டிடங்கள்

முனீஸ்வரன் (நெசவுக்கூட உரிமையாளர், சக்கம்பட்டி)

ஆண்டிப்பட்டி, பல்லடம், குமாரபுரம் ஆகிய 3 இடங்களில் உயர்தொழில்நுட்ப பூங்கா அமைக்க ஒரே நாளில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் ஆண்டிப்பட்டியை தவிர மற்ற 2 இடங்களிலும் இந்த திட்டம் அப்போதே பயன்பாட்டிற்கு வந்து இன்று வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கிறது. ஆனால் ஆண்டிப்பட்டி நெசவாளர்களுக்கு மட்டும் இந்த திட்டம் கிடைக்கவில்லை. இந்த திட்டத்தினை செயல்படுத்த 45 ஏக்கர் நிலம் அரசு கையகப்படுத்தி 7 தறிக்கூடங்கள் கட்டப்பட்டு, அந்த கட்டிடங்கள் தற்போது பயன்பாடின்றி காட்சி பொருளாகவே உள்ளது.

நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் ஆண்டிப்பட்டி பகுதியில் இந்த திட்டத்தினை செயல்படுத்தினால், நெசவில் அரசு செயல்படுத்தும் நவீன யுக்திகள், எங்களுக்கும் கிடைக்கும். இதன்மூலம் நாங்களும் புதிய தொழில்நுட்பங்களை கற்று கொள்ள முடியும். எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி கிடப்பதால் நலிந்த நெசவாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நேரடி, மறைமுகமாக பயன்பெறும் ஆண்டிப்பட்டி நெசவு பூங்கா பணியை விரைந்து முடிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story