பிரதான கால்வாய்களை 3 நாட்களில் தூர்வார நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் பிரதான கால்வாய்களை 3 நாட்களில் தூர்வாரி முடிக்க வேண்டும் என கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பிரதான கால்வாய்களை 3 நாட்களில் தூர்வாரி முடிக்க வேண்டும் என கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கால்வாய்கள் தூர்வாருதல்
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி நடந்து வருக்கிறது. முதல் மடை, நடுமடை ஆகிய பகுதிகளில் நாற்று நடப்பட்டு 30 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதே சமயம் கடை மடை பகுதிகளில் நாற்று நடப்பட்டு 20 நாட்கள் வரை ஆகியுள்ளது. இதைத் தொடர்ந்து சாகுபடிக்காக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே கால்வாய்களை உடனே தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.5 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கிளை கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல பிரதான கால்வாய்களான அனந்தனார், தோவாளை மற்றும் புத்தனார் உள்ளிட்ட கால்வாய்கள் தூர்வாரப்பட உள்ளன.
கருத்துக் கேட்பு கூட்டம்
ஆனால் கால்வாயில் தண்ணீர் செல்வதால் தூர்வாரும் பணிக்காக தண்ணீரை அடைக்க வேண்டி இருக்கிறது. எனவே பிரதான கால்வாய்களில் தண்ணீரை அடைத்து தூர்வாருவது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) ஆல்பர்ட் ராபின்சன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி ஆகியோர் விவசாயிகளிடம் கருத்து கேட்டனர். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் முதல் மடை மற்றும் நடுமடை பகுதிகளில் நடவு செய்த பயிர்கள் வளர்ந்துவிட்டன. கடைமடை பகுதியில் நடவு செய்த பயிர்களுக்கு கட்டாயம் தண்ணீர் தேவைப்படுகிறது. அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது அனந்தனார், தோவாளை மற்றும் நாஞ்சில்நாடு புத்தனார் கால்வாய்களில் திறந்துவிடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கால்வாய்களை தூர்வார தண்ணீரை நிறுத்தினால் பயிர்கள் பாதிக்கக் கூடிய சூழல் உருவாகும். எனவே கால்வாய்களில் 2 அல்லது 3 நாட்கள் மட்டும் தண்ணீரை அடைத்து வைத்து விட்டு 3 நாட்களில் ஒட்டுமொத்த கால்வாய்களையும் தூர்வார வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.