கடமலைக்குண்டுவில் உறைகிணறுகளை தூர்வாரும் பணி தீவிரம்
கடமலைக்குண்டுவில் உறைகிணறுகளை தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடமலைக்குண்டுவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக கரட்டுப்பட்டி மூலவைகை ஆற்றில் 4 இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் மழை இல்லாத காரணத்தால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் வெயில் அதிகரித்து காணப்படுவதால் உறை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. தற்போது உறை கிணறுகளில் மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் உள்ளது. இதனால் கடமலைக்குண்டுவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கடமலைக்குண்டு ஊராட்சி பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் உறைகிணறுகளை தூர்வாரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திராதங்கம், ஊராட்சி செயலர் சின்னசாமி ஆகியோர் பார்வையிட்டனர். பணிகள் முடிந்தாலும் அடுத்த சில மாதங்கள் வரை மட்டுமே குடிநீர் வழங்க முடியும். எனவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும், குடிநீர் வீணாவதை தடுக்க சேதமடைந்த குழாய்கள் அனைத்தும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.