தூர்வாரும் பணிகளை முறைப்படுத்த வேண்டும்


தூர்வாரும் பணிகளை முறைப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூர்வாரும் பணிகளை முறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

நாகப்பட்டினம்


தூர்வாரும் பணிகளை முறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

நாகை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

சோழன்:-நாகை மாவட்டத்தில் போதிய மணல் குவாரிகள் இல்லாததால் அரசு மற்றும் தனியார் பணிகள் நடைபெறமுடியாமல் உள்ளது. எனவே மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் தங்களது நிதியில் இருந்து அரசு பள்ளிகளுக்கு கழிவறை, குடிநீர் வசதி செய்து தர அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

குளிர்பதன கிடங்கு

கஜா புயலுக்கு பின்னர் வேதாரண்யம் பகுதியில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் தற்போது சேதம் அடைந்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தலாம். வேதாரண்யம் பகுதியில் மாங்காய் அதிக அளவு விளைச்சல் ஏற்பட்டுள்ளது. மாம்பழங்களை பாதுகாக்க தோட்டக்கலை துறை சார்பில் குளிர்பதன கிடங்கு அமைத்து தர வேண்டும்.

சுப்பையன்:- ஜூன் மாதம் 12- ந்தேதி பாசனத்திற்கு ேமட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் வேதாரண்யம் பகுதியில் வாய்க்கால்களில் ஆகாயதாமரையை அகற்ற வேண்டும்.

தூர்வாரும் பணி

கணேசன்:- நாகை நகர பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி முற்றிலுமாக ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு, மகளிர் பிரிவு ஆகியவை பழைய இடத்திலேயே இயங்க செய்ய வேண்டும். நாகை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முறைப்படுத்த வேண்டும்.

குமார்:- 2022-23-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு இன்னும் நிதி கிடைக்கவில்லை. இதனால் ஒப்பந்தகாரர்கள் பணிகள் செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். துவாக்குடி பகுதியில் இருந்து ஜல்லி எடுத்து வருவதாக குறிப்பிட்டு டெண்டர் விடப்படுகிறது. ஆனால் கரூர் மாவட்டத்தில் இருந்து பணிகளுக்கு ஜல்லி வருகிறது. இதனால் ஜல்லி விலை கூடுதல் ஆகிறது. இதை கருத்தில் கொண்டு ஒப்பந்தகாரர்கள் பணி செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். அதே போல் நடப்பு ஆண்டிற்கு பணிகள் மேற்கொள்ள எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.


Next Story