கழுமலையாறு பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணி
சீர்காழி கழுமலையாறு பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி கழுமலையாறு பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாசன வாய்க்கால்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழுமலையாறு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை நம்பி மேலத்தேனூர், கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, நிம்மேலி, மருதங்குடி, ஆலஞ்சேரி, தாடாளன் கோவில், சீர்காழி, தென்பாதி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விலை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் இந்த வாய்க்கால் சீர்காழி நகர் பகுதியில் மழைக்காலங்களில் வடி வாய்க்காலாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த வாய்க்காலை மேலதேனூர் முதல் சீர்காழி புதிய பஸ் நிலையம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் தூர்வார அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக தூர்வார வேண்டுமென கூறி விவசாயிகள் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தாலுகா அலுவலக முற்றுகை போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இந்நிலையில் விவசாயிகளிள் வேண்டுகோளை ஏற்று ரெயில்வே ரோட்டில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை கழுமலையாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றி தூர்வாரும் பணி விவசாய சங்க தலைவர் கோவி நடராஜன், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் ராமானுஜம், ஒன்றிய குழு உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
இந்த பணியின் போது பாசன வாய்க்காலில் விடப்பட்ட கழிவுநீர் குழாய்கள், ஆக்கிரமித்து கட்டப்பட்ட மதில் சுவர்கள், மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கழுமலையாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி எந்திரம் மூலம் தூர்வாரப்படுவதற்கு கழுமலையாறு பாசன விவசாயிகள் பொதுப்பணித்துறையினருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.