மாவட்டத்தில் 3 லட்சத்து 20 ஆயிரம் வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தகவல்


மாவட்டத்தில் 3 லட்சத்து 20 ஆயிரம் வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தகவல்
x

ஈரோடு மாவட்டத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 20 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 20 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜல் ஜீவன் திட்டம்

ஜல் ஜீவன் திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் செயல்பட தொடங்கியது.

திட்டம் தொடங்கப்பட்டபோது, 19 கோடியே 35 லட்சம் கிராமப்புற வீடுகளில் 3 கோடியே 23 லட்சம் வீடுகள் மட்டுமே குழாய் இணைப்புகள் பெற்றிருந்தன. கடந்த 3 ஆண்டுகளில் இந்த திட்டத்தின் மூலம் 11 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகள் தற்போது குழாய் மூலம் குடிநீர் பெற்றுள்ளன.

நிலத்தடி நீர்மட்டம்

ஜல் சக்தி அமைச்சக ஆவணங்கள்படி 2022-ம் ஆண்டு வரை தமிழகத்தில் ஒரு கோடியே 26 லட்சம் ஊரக வீடுகளில் 43 லட்சத்து 48 ஆயிரம் வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை காவிரி, பவானி ஆறுகள், ஏரி, குளங்கள் இருப்பதால் சுமார் 50 சதவீத கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் போதிய அளவில் உள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் காவிரியில் இருந்து கிடைத்தாலும், மாவட்டத்தின் சில பகுதிகளில் சுத்தமான குடிநீர் இல்லை. இதனால் இந்த பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஜல்ஜீவன் திட்டம் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.

குடிநீர் ஆதாரங்கள்

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'ஜல் ஜீவன் திட்டம் ஊரக பெண்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. முன்பு அவர்கள் பல மைல் தூரம் நடந்து சென்று தலையில் பானைகளை சுமந்து வீடு திரும்ப வேண்டியிருந்தது. தற்போது ஜல் ஜீவன் திட்டத்தால் குடிநீர் வீட்டு வாசலிலேயே கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 24 ஆயிரம் ஊரக வீடுகளில் 3 லட்சத்து 20 ஆயிரம் வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம பகுதிகளில் மக்கள் தடையற்ற குடிநீரை பெறுகின்றனர். 2024-ம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், குடிநீர் வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது' என்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டர் என்.மனீஷ் கூறும்போது, 'ஈரோடு மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் இன்னும் சுமார் ஒரு லட்சத்து 5 ஆயிரம் வீடுகளுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டி உள்ளது. கிராமங்களில் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 225 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுவிடும்' என்றார்.


Next Story