தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் -அமைச்சர் கே.என். நேரு தகவல்
சென்னை மாநகராட்சி பகுதிகளுடன் இணைக்கப்பட்ட 14 பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் இல்லந்தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னை,
சட்டசபையில் கேள்வி நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), 'பள்ளிக்கரணை, வேளச்சேரி பிரதான சாலையில் மயிலை பாலாஜி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வருமா?' என்றும், பாலவாக்கம், கந்தன்சாவடி, பெருங்குடி, உத்தண்டி, ஜல்லாடையான்பேட்டை, காரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து கூறியதாவது:-
பாதாள சாக்கடை
பள்ளிக்கரணை, வேளச்சேரி பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் ஜூன் 30-ந்தேதி முடிவடையும். அதேபோல் உறுப்பினர் குறிப்பிட்டுள்ள சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட புழுதிவாக்கம், கொட்டிவாக்கம், பெருங்குடி, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், ஈச்சம்பாக்கம், உத்தண்டி, ஓக்கியம் துரைப்பாக்கம், உள்ளகரம் உள்ளிட்ட 14 பகுதிகள் பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள்.
இங்கு 7 லட்சத்து 65 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். 5,337 தெருக்கள் உள்ளன. புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க கூடிய பணி நடந்து வருகிறது. பள்ளிக்கரணை பாதாள சாக்கடை திட்டம் பணிகள் ரூ.52 கோடியில் தொடங்கப்பட்டு, 2011-ல் முடிக்க திட்டமிடப்பட்டது. மொத்தம் 93.13 கி.மீ. நீளமுள்ள இந்த கால்வாய் அமைக்கும் பணி என்பது 10 முறை ஒப்பந்த காலம் நீட்டிக்கப்பட்டும், 90.87 கி.மீ. நீளத்திற்கான பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டது.
இல்லந்தோறும் குடிநீர் இணைப்புகள்
பணி தாமதமாக நடைபெறுவதால் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு புதிதாக ரூ.39.30 கோடியில் புதிய ஒப்பந்ததாரருக்கு இந்த பணி கடந்த 2020-ல் வழங்கப்பட்டு உள்ளது. பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும் நீர்வளத்துறையின் கால்வாய்கள் வழியே குழாய்களை மாற்றி அமைக்க வேண்டியது உள்ளதால் பணி என்பது தாமதமானது, தற்பொழுது பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் வரும் ஜூன் 30-ந்தேதிக்குள் முடிக்கப்படும்.
அதேபோல வேளச்சேரி- தாம்பரம் சாலையை ஒட்டிய பகுதிகளில் நடைபெறக்கூடிய பாதாள சாக்கடை அமைக்கக்கூடிய பணி என்பது செப்டம்பர் 30-ந்தேதி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் 79 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்கள்.
குடிநீர் திட்டத்தை பொறுத்த வரையில் 110 எம்.எல்.டி. தரப்படுகின்ற தண்ணீரை காட்டிலும், இப்போது 150 எம்.எல்.டி. வர பெறுகிற தண்ணீரை தாம்பரம், பல்லாவரம் வரை இடையில் இருக்கும் சோழிங்கநல்லூரையும் சேர்த்து குடிநீர் வழங்குகிற பணிகள் இல்லம்தோறும் குடிநீர் இணைப்பு தருகிற பணியை மேற்கொள்ள இருக்கிறோம்.
அந்த புதிய 150 எம்.எல்.டி. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் இன்னும் 2 மாதத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார். எனவே குடிநீரும், பாதாள சாக்கடை பணிகளும் உறுப்பினர் குறிப்பிட்டு இருக்கிற பகுதிகளுக்கு வந்து சேரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.