தடையின்றி குடிநீர் வினியோகிக்க வேண்டும்


தடையின்றி குடிநீர் வினியோகிக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தடையின்றி குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தடையின்றி குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

குடிநீர் வசதி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊட்டி பாலாடா அருகே பிங்கசகல் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதனால் வீட்டு பயன்பாட்டுக்கு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கோடை வெயில் அதிகரிக்கும் முன்பே, பொதுமக்களுக்கு தடை இல்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

170 மனுக்கள்

கூக்கல்தொரை கிராம மக்கள் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் ஜெய்குமார் தலைமையில் மனு அளித்தனர். அந்த மனுவில், கிராமத்தில் 50 குடும்பத்தினர் 40 ஆண்டுகளாக ஒரு குடிநீர் கிணற்றை பயன்படுத்தி வருகிறோம். புறம்போக்கில் உள்ள இந்த கிணற்றை சுற்றி ஒருவர் மின்வேலி அமைத்து நடைபாதையை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். இதனால் கிணற்றிற்கு சென்று மோட்டார் இயக்க வழி இல்லாததால், குடிப்பதற்கு தண்ணீர் இன்றி சிரமப்படுகிறோம். எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 170 மனுக்களை கலெக்டர் அம்ரித் பெற்றுக் கொண்டார். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதேபோல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு ரூ.25 ஆயிரம் உள்பட 8 பயனாளிகளுக்கு ரூ.3.40 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


Next Story