குடிநீர் சீராக வழங்க வேண்டும்; கலெக்டரிடம் மனு
முதலூர் பஞ்சாயத்தில் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் பஞ்சாயத்து தலைவர் பொன் முருகேசன் தலைமையில் ஊராட்சி செயலர் முருகேசன், தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாந்தகுமார், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜெயபாண்டியன், வியாபாரிகள் சங்க பொருளாளர் ரவிச்சந்திரன், ஹரிராம் உள்ளிட்ட கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில், "சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர், சுப்பராயபுரம் ஊராட்சிகளுக்கு கூட்டுக்குடிநீர் வழங்கும் குடிநீர் குழாய் சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் 600 மீட்டர் நீளத்துக்கு சேதமாகி காணப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக 2 ஊராட்சிகளுக்கும் கூட்டுக்குடிநீர் முறையாக வரவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குடிநீர் குழாய்களை சீரமைத்து சீராக குடிநீர் வழங்க வேண்டும். முதலூர் ஊருணியை ஆழப்படுத்தி வரத்து கால்வாயை சீர்செய்து குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும். முதலூர் பகுதிக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்துள்ளதால் அதனை மாற்றி புதியதாக 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.