30 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம்


30 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம்
x

புள்ளம்பாடி ஒன்றியத்தில் 30 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் 23 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

திருச்சி

புள்ளம்பாடி ஒன்றியத்தில் 30 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் 23 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம்

புள்ளம்பாடி ஒன்றியத்தில் 33 ஊராட்சிகள் உள்ளன. இதில் கருடமங்கலம், தெரணிபாளையம், வரகுப்பை, தாப்பாய், மேலரசூர், மால்வாய், கல்லகம், சிறுகளப்பூர், வந்தலை-கூடலூர், நல்லூர், நம்புகுறிச்சி, கீழரசூர், ஆமரசூர், தென்னரசூர் உள்ளிட்ட கிராமங்கள் வறட்சியான பகுதியாகும். இப்பகுதி வானம்பார்த்த பூமியாக அமைந்துள்ளது. இதனால் இங்கு மானாவாரி விவசாயமே அதிக அளவில் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்தாலும் நல்ல குடிநீர் கிடைப்பதில்லை.

இதனையடுத்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நத்தமாங்குடி கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றுகரையில் ராட்சத ஆழ்குழாய் அமைத்து கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அங்கு இருந்து குழாய் மூலம் அலுந்தலைப்பூர் கிராமத்தில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றம் செய்து நீர் சேமிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

23 ஊராட்சிகள்

இந்நிலையில் 23 ஊராட்சிகளில் உள்ள கிராம மக்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில கிராமங்களுக்கு கடந்த 2 மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக நீர் செல்வதால் ஆழ்குழாய்கிணறு மூழ்கியுள்ளது. இதனால் அங்கிருந்து தண்ணீர் ஏற்ற முடியவில்லை என்று கூறுகிறார்கள். இந்த ஆண்டில் 4-வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிஅடைந்து வருகின்றனர்.

குடிநீர் வருவதில் தடை

கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் புள்ளம்பாடி வழியாக அலுந்தலைப்பூர் சம்புவிற்கு (தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி) கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில் வரும் வழியிலேயே சில கிராமங்களுக்கு நேரடியாக குடிநீர் மேல்நிலை நீர்த்ேதக்க தொட்டிகளுக்கு ஏற்றப்படுவதால் அலுந்தலைப்பூர் சம்புவிற்கு குடிநீர் வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சென்று கல்லக்குடி, புள்ளம்பாடியில் குடிநீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் தங்கள் அவலநிலையை தெரிவித்ததாவது:-

மேலரசூர் கிராமத்தை சேர்ந்த சிவசூரியன்:-

கடந்த 3 மாதங்களில் இரண்டு முறை மட்டுமே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வந்துள்ளது. இதனால் எங்கள் பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.இரு சக்கர வாகனங்கள் உள்ளோர் கல்லக்குடி உள்ளிட்ட நகர பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு வருகிறார்கள். வாகன வசதி இல்லாதோர் உள்ளூரில் உள்ள ஏரி மற்றும் ஊற்றுகளில் குடிநீர் எடுத்து குடித்து வருகிறோம். இதனால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நிரந்தர தீர்வுகாண...

கீழரசூர் ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் பார்த்திபன்:- நகர பகுதிகள் மட்டுமல்ல, கிராமப்புற பகுதிகளிலும் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, சாக்கடை வசதிகள் செய்து தருவது அரசுகளின் கடமை ஆகும். ஆனால் நல்ல குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறோம். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கூடுதலாக குடிநீர் எடுத்து சேமித்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். மேலும் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆழ்துளை கிணறுகளை அதிகப்படுத்த வேண்டும்.

கல்லகம் சமூகசேவகர் டேனியல்:- எங்கள் கிராமத்திற்கு கொள்ளிடம் குடிநீர் கிடைத்து சுமார் 45 நாட்கள் ஆகிறது. நல்ல குடிநீர் கிடைக்காததால் நாங்கள் விவசாய கிணறுகளிலும், ஆழ்குழாய் கிணறுகளிலும் கிடைக்கும் சுண்ணாம்பு நீரை குடித்து வருகிறோம். இதனால் சிறுநீரக கல் ஏற்பட்டு உடல் நிலை மோசம் அடையும் சூழ்நிலை உள்ளது. நல்ல தண்ணீர் இல்லாததால் மருத்துவமனைக்கே அதிக தொகையை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

3 மாதங்களுக்கு ஒருமுறை

ஒரத்தூர் விவசாயி கணபதிவேல்:- மாவட்டத்தின் கடைகோடியில் ஒரத்தூர், சாத்தப்பாடி கிராமங்கள் உள்ளன. எங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் கிடைப்பது அரிதாக உள்ளது. 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறையே குடிநீர் வருகிறது. இதனால் கிணறு, ஏரிகளில் கிடைக்கும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். அந்த தண்ணீர் சுண்ணாம்பு கலந்ததாகவும், உப்பு நீராகவும் உள்ளது.

எம்.கண்ணனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம்:- மாவட்டத்தின் கடைகோடி பகுதியான எம்.கண்ணனூர் கிராமத்திற்கு இதுவரை கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் வரவே இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்களுக்கு விரைவில் கூட்டுக் குடிநீர் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.


Next Story