2 ஆண்டுகளாக திறக்கப்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
வாய்மேடு அருகே பணிகள் முடிந்தும் 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்மேடு:
வாய்மேடு அருகே பணிகள் முடிந்தும் 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் சமத்துவபுரம் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.7 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. ஆனால் இன்னும் திறக்கப்படாமல் மூடிய நிலையிலேயே உள்ளது. தற்சமயம் தகட்டூர் பகுதியில் 2 நாட்களுக்கு ஒரு முறை தான் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது கோடை காலம் தொடங்கியநிலையில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து வருவதால் பொதுமக்களுக்கு தண்ணீர் குறைவாகவே வழங்கப்படுகிறது.
2 ஆண்டுகளை கடந்தும்...
இந்த நிலையில் பெரிய அளவிலான கிணற்றில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, அந்த தண்ணீரை எந்திரம் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக, 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்னமும் திறக்கப்படாமல் மூடியே கிடப்பது வேதனை அளிக்கிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பயன்பாட்டுக்கு கொண்டுவர...
எனவே, கோடை காலமும் தொடங்கிய நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சற்றும் காலம் தாழ்த்தாமல், பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.