டெம்போ மோதி டிரைவர் பலி
கன்னியாகுமரி அருகே டெம்போ மோதி டிரைவர் பலி
நாகர்கோவில்,
கன்னியாகுமரி அருகே உள்ள முகிலன் குடியிருப்பை சேர்ந்தவர் செல்வ ஜேக்கப் (வயது 44), டெம்போ டிரைவர். இவர் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி அளவில் சின்னமுட்டத்தில் கட்டிட கழிவுகளை ஏற்றுவதற்காக டெம்போவை ஓட்டிச் சென்றார். பின்னர் அங்கு டெம்போவை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, டெம்போ நகர்ந்து விடாமல் இருப்பதற்காக சக்கரத்துக்கு அடிப்பகுதியில் கல்லை வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து கட்டிட கழிவுகள் ஏற்றியதும் டெம்போவை இயக்குவதற்காக சக்கரத்தின் அடியில் வைத்திருந்த கல்லை எடுக்க முயன்றார். அப்போது, டெம்போ திடீரென நகர்ந்து செல்வ ஜேக்கப் மீது மோதியதோடு அருகே இருந்த சுவருடன் சேர்த்து இடித்தது. இதில், உடல் நசுங்கி செல்வ ஜேக்கப் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வ ஜேக்கப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
----