தம்பி கொலையில் டிரைவர்- தாய் கைது
கோவில்பட்டி அருகே தம்பி கொலையில் டிரைவர்- தாய் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே தம்பி கொலையில் டிரைவர்- தாய் கைது செய்யப்பட்டனர்.
டிரைவர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மேல பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்தவர் பூல்சாமி என்ற கொம்பையா. இவருடைய மகன்கள் பாண்டித்துரை (வயது 29), கருப்பசாமி (26). டிரைவர்களான இவர்கள் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.
இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு- ஊத்துப்பட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்தபோது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் டாஸ்மாக் பாரில் இருந்து வெளியே வந்த கருப்பசாமியை இரும்பு கம்பியால் பாண்டித்துரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கருப்பசாமி பரிதாபமாக இறந்தார்.
அண்ணன்-தாய் கைது
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக பாண்டித்துரை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய தாயார் மகாலட்சுமி (55) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான பாண்டித்துரை போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
மனைவியிடம் தவறாக பேசியதால்...
எனது தந்தை கொம்பையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பின்னர் நானும், தம்பி கருப்பசாமியும் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தோம்.
இந்த நிலையில் கருப்பசாமி அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, தனக்கு திருமணம் செய்து வைக்குமாறும், வீட்டை எழுதி தருமாறும் கூறி, என்னிடமும், தாயார் மகாலட்சுமியிடமும் தகராறு செய்தார். மேலும் எனது மனைவியிடமும் தவறான கண்ணோட்டத்தில் பேசி வந்தார். இதனை அறிந்த நான், தம்பி கருப்பசாமியைக் கண்டித்தேன். ஆனாலும் அவன் பொருட்படுத்தவில்லை. அப்போது கருப்பசாமி உயிரோடு இருக்கும் வரையிலும் நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது என்று தாயார் மகாலட்சுமியும் கூறினார்.
சம்பவத்தன்று இரவில் டாஸ்மாக் பாரில் நானும், தம்பி கருப்பசாமியும் மது குடித்தோம். அப்போது தம்பிக்கு அறிவுரை கூறினேன். ஆனால் அவன் ஏற்க மறுத்து தகராறில் ஈடுபட்டான். இதில் ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அவனை தாக்கினேன். இதில் காயமடைந்த கருப்பசாமி உயிரிழந்தார். பின்னர் தப்பி சென்ற என்னை போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு பாண்டித்துரை வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான பாண்டித்துரை, தாயார் மகாலட்சுமி ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கோவில்பட்டி 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.