அண்ணியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை
அண்ணியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கத்தியால் குத்திக்கொலை
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தாளக்குடி வடக்குத்தெரு காலனியை சேர்ந்தவர் அன்புராஜ். இவருடைய மனைவி ராஜலெட்சுமி (வயது 38). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வந்தார். அன்புராஜின் தம்பி சந்துரு என்ற பாலசந்தர்(39). இவர் சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் சொத்து தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாலசந்தர் பணப்பிரச்சினை தொடர்பாக வீட்டில் தகராறு செய்து கொண்டு இருந்தார்.
அப்போது பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ராஜலெட்சுமி, அதனை கண்டு தனது கணவர் அன்புராஜுக்கு போன் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலசந்தர் கத்தியை எடுத்து வந்து ராஜலெட்சுமியின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலச்சந்தரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு திருச்சி 3-வது மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் ஆனந்தன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி தங்கவேல் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட பாலசந்தருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.