அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் வேலை நிறுத்தம்
திருவாரூரில் அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் பஸ்கள் இயங்காததால் பயணிகள் அவதிப்பட்டனா்.
திருவாரூரில் அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் பஸ்கள் இயங்காததால் பயணிகள் அவதிப்பட்டனா்.
அரசு பஸ்
திருவாரூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து 68 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு திருவாரூரில் இருந்து நாகூர் செல்லும் பஸ்சை குடவாசலை சேர்ந்த அம்பேத்கர் என்பவர் ஒட்டி சென்றார். திருப்பூண்டியை சேர்ந்த ராஜராமன் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார்.இந்த பஸ் கீழ்வேளுர் அருகே அகரகடம்பனூர் என்கிற இடத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் பஸ்சை நிறுத்தினர். இதில் ஒரு வாலிபர் மட்டும் பஸ்சில் ஏறியனார். சிறிது தூரம் சென்றதும் பஸ்சை நிறுத்தி அந்த வாலிபர் இறங்கியவுடன் மற்றொரு வாலிபர் பஸ்சில் ஏறினார். இதேபோன்று 4 வாலிபர்களும் பஸ்சில் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர். இதனால் பஸ்சை நிறுத்திய கண்டக்டர் ராஜராமன் அந்த வாலிபரை தட்டிக்கேட்டார்.
வேலை நிறுத்தம்
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் சாலையில் கிடந்த பாட்டிலை உடைத்து கண்டக்டரின் தொடையில் குத்தினர். இதை தடுக்க வந்த டிரைவர் அம்பேத்கரையும் தாக்கினர். இதில் காயமடைந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ராஜராமன் கீழ்வேளுர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இதன்பேரில் பாலாஜி, விவின், முருகநாதன் மற்றும் ஒருவர் என 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்கள் நேற்று காலை திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதனால் காலை 5 மணி முதல் 7 மணி வரை பணிமனையில் எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து கழக வணிக மேலாளர் சிதம்பரகுமார் நேரில் வந்து டிரைவர், கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இன்று (நேற்று) மாலைக்குள் கண்டக்டர், டிரைவர் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கீழ்வேளுர் போலீசார் தெரிவித்தனர்.
முகூர்த்த நாள்
இதைத்தொடா்ந்து டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இதன்பின் பணிமணையில் இருந்து வழக்கம்போல் அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன.நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால் காலை 5 மணி முதல் திருவாரூர் பழைய பஸ்நிலையத்தில் பயணிகள் வெளியூர் செல்ல காத்திருந்தனர். 2 மணி நேரம் பஸ்கள் இயக்கப்படாததால் அவர்கள் உரிய நேரத்தில் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.