கோத்தகிரியில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோத்தகிரியில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோத்தகிரி,
சாலை போக்குவரத்து திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும், போக்குவரத்து விதிமீறல்களுக்கு வசூலிக்கப்படும் கூடுதல் அபராத தொகையை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீலமலை அனைத்து தொழிலாளர்கள் சங்க வாகன பிரிவு மற்றும் கோத்தகிரி வட்டார வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள் சார்பில், கோத்தகிரியில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது. வாகன பிரிவு தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து மார்க்கெட் திடல் வரை கண்டன பேரணி நடைபெற்றது. தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்களை தமிழக அரசு அமுல்படுத்தக் கூடாது. போக்குவரத்து விதிமீறல்களுக்கு வசூலிக்கப்படும் கூடுதல் அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சாலை போக்குவரத்து திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கோஷம் எழுப்பி வலியுறுத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சோழா மகேஷ், மணிகண்டன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.