தாட்கோ மூலம் டிரோன் கருவியை இயக்க பயிற்சி ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ மூலம் அளிக்கப்படும் டிரோன் கருவியை இயக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
டிரோன் இயக்க பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மூலமாக விவசாயத்துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவியை இயக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வளர்ந்த நாடுகளில் டிரோன் தொழில்நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை விவசாய நிலங்களில் தெளிக்கும் பணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது. பயிர்களில் பூச்சிநோய் தாக்குதல் ஏற்பட்டால் குறைந்த நேரத்தில் 25 ஏக்கர் முதல் 30 ஏக்கர் வரை டிரோன்கள் மூலம் மருந்துகளை தெளிக்க முடியும். இதன் மூலம் ஒரு நாளில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட முடியும்.
உரிமம்
விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கிராமங்களில் உள்ள மக்களுக்கு டிரோன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். இந்த பயிற்சியை பெற 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி காலம் 10 நாட்கள் ஆகும். பயிற்சிக்கான மொத்த தொகை தாட்கோவால் வழங்கப்படும். இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட டிரோன் ரிமோட் பைலட் உரிமத்தை பெறுவார்கள். இந்த உரிமம் 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது.
மானியத்துடன் வங்கி கடன்
பயிற்சி பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ டிரோன் கருவிகளை வாங்கலாம். உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தலாம். விவசாய டிரோன்கள் வாங்குவதற்கு வேளாண்மை துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும், தாட்கோவின் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியத்துடன் வங்கி கடன் வழங்கவும் வழிவகை செய்யப்படும்.
இந்த திட்டத்தில் பயிற்சி பெற தகுதியுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தர்மபுரியில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.