மல்லசமுத்திரத்தில் கிணற்றில் மூழ்கி 2 பேர் பலி
மல்லசமுத்திரத்தில் குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி 2 பேர் பலியாகினர்.
எலச்சிபாளையம்:
கிணற்றில் 2 பேர் பிணம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவருக்கு சொந்தமான விவசாய கிணறு ஆத்துமேடு கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை அந்த கிணற்றில் 2 ஆண்களின் உடல்கள் தண்ணீரில் மிதந்தன.
இதனைப் பார்த்து அந்த பகுதிக்கு விவசாய வேலைக்கு சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் மல்லசமுத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் தண்ணீரில் பிணமாக மிதந்தவர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என தெரியவில்லை.
நண்பர்கள்
இதையடுத்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக மிதந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் கிணற்றில் பிணமாக மிதந்தவர்கள் ஜேடர்பாளையத்தை சேர்ந்த வருதராஜன் மகன் வேல்முருகன் (வயது 28), வேப்பம்பட்டி புதூரை சேர்ந்த கதிர்வேல் மகன் அப்பு (32) என்பது தெரியவந்தது.
இதில் வேல்முருகன் கோழிப்பண்ணை ஒன்றில் சூப்பர்வைசராகவும், அப்பு டிரைவராகவும் வேலை பார்த்து வந்ததும், நண்பர்களான இவர்கள் 2 பேரும் கடந்த வியாழக்கிழமை முதல் மாயமானதும் தெரியவந்தது.
கிணற்றில் மூழ்கி பலி
சம்பவத்தன்று அவர்கள் கிணற்றின் அருகே மது குடித்ததும், பின்னர் கிணற்றில் குளிக்க சென்றபோது மதுபோதையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததும் போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.மல்லசமுத்திரத்தில் கிணற்றில் மூழ்கி நண்பர்கள் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.