உறவினர் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்றபோது குட்டையில் மூழ்கி லாரி டிரைவர் பலி


உறவினர் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்றபோது குட்டையில் மூழ்கி லாரி டிரைவர் பலி
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உறவினர் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்றபோது குட்டையில் மூழ்கி லாரி டிரைவர் பலியானார்.

லாரி டிரைவர்

சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவருடைய மகன் தயாளன் (வயது 25). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு வாணீஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

தயாளனின் உறவினரான தங்கராஜ் என்பவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வத்தல்மலை பெரியூரில் வசித்து வருகிறார். இவருடைய மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள லாரி டிரைவர் தயாளன், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் வத்தல்மலைக்கு வந்தார்.

நீரில் மூழ்கி பலி

பின்னர் அவர் பெரியூரில் அரசு புறம்போக்கு நிலத்தில் மழைநீர் தேங்கி நின்ற குட்டை ஒன்றுக்கு தனியாக குளிக்க சென்றார். அவர் குட்டையின் ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருந்தபோது, திடீரென சேற்றில் சிக்கினார். இதனால் அவர் குட்டையில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

வெகுநேரமாகியும் தயாளன் வீடு திரும்பாததால், அவருடைய நண்பர்கள், உறவினர்கள் குட்டைக்கு சென்று தேடினர். அப்போது அவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டது.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் குட்டையில் மூழ்கி பலியான தயாளன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உறவினர் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்றபோது, லாரி டிரைவர் குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story