கொடிவேரி அணையில் மூழ்கி விசைத்தறி உரிமையாளர்கள் 2 பேர் பலி
கோபி அருகே கொடிவேரி அணையில் மூழ்கி விசைத்தறி உரிமையாளர்கள் 2 பேர் பலியானார்கள்.
டி.என்.பாளையம்
கோபி அருகே கொடிவேரி அணையில் மூழ்கி விசைத்தறி உரிமையாளர்கள் 2 பேர் பலியானார்கள்.
விசைத்தறி உரிமையாளர்கள்
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா செங்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது40). இவர் அந்த பகுதியில் விசைத்தறி பட்டறை வைத்து நடத்தி வந்தார். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
ரமேஷின் நண்பர் அவினாசி ராமநாதபுரம் அருகே உள்ள தொட்டகலாம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (36). இவரும் விசைத்தறி பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
அணையில் மூழ்கினர்
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரமேசும், ராமசாமியும் மோட்டார்சைக்கிளில் ஈரோடு மாவட்டம் கோபி பகுதிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் கொடிவேரி அணை பகுதிக்கு சென்று சுற்றி பார்த்தனர். அப்போது அணையில் ஆர்ப்பரித்து கொட்டு்ம் தண்ணீரை பார்த்ததும் 2 பேருக்கும் குளிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது..
இதைத்தொடர்ந்து 2 பேரும் அணையில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்து கொண்டிருந்தனர். இதனால் இருவரும் தண்ணீரில் மூழ்கினார்கள். இதனை அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் பார்த்து 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.
பிணமாக மீட்பு
உடனே இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று அணையில் இறங்கி 2பேரையும் தேடி பார்த்தனர். அப்போது அவர்கள் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ராமசாமியும், ரமேசும் பிணமாக மீட்கப்பட்டனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரமேஷ், ராமசாமியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடிவேரி அணையில் மூழ்கி விசைத்தறி உரிமையாளர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.