போதை பழக்கம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் வடலூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
போதை பழக்கம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் என்று வடலூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
வடலூர்,
வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உடல் நலமும், மனநலமும் மேம்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு பள்ளி கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அமுதவள்ளி வரவேற்றார்.
இதில், வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
40 லட்சம் மாணவர்கள்
அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
இன்று(அதாவது நேற்று) தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதை பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 40 லட்சம் மாணவர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். நமக்கு தெரிந்து இதுபோன்ற பழக்க வழக்கத்துக்கு யாராவது ஆட்பட்டு இருந்தால் ஆசிரியரிடம் உடன் தகவல் தெரிவிக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலத்துறை, காவல்துறை ஆகிய 3 துறை களை பயன்படுத்தி போதைப் பொருட்களுக்கு எதிரான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம்.
சமுதாயத்தை சீரழிக்கும்
நல்வழிக்கு வள்ளலார் போதித்தை தினசரி கடைபிடித்தாலே போதுமானதாகும். மாணவர்களுக்கு படிப்பு முக்கியம், அதே நேரத்தில் ஒழுக்கத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும். போதை பொருட்களை பொறுத்தவரை முதலில் மிட்டாய் மாதிரி கொடுப்பார்கள், காசுவேண்டாம் எனக் கூறுவார்கள். அதை தொடர்ந்து 2 முதல் 3 நாட்கள் சாப்பிட்டால் அது பழக்கமாகிவிடும். அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாத நிலை ஏற்படும்.
இது நமக்கு தேவையா?.போதை பொருளால் தனி நபர் மட்டும் பாதிக்கப்படவில்லை, அது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நாளை முதல் ஒரு வாரத்துக்கு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க உள்ளோம் இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் நெய்வேலி எம்.எல். ஏ. சபா.ராஜேந்திரன், மாவட்ட கல்விக்குழுதலைவர் சிவக்குமார், வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், துணை தலைவர் சுப்பராயலு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.