போதையில்லா தமிழகம் உறுதிமொழி : டாஸ்மாக் வசூல் ஒரே நாளில் 273.92 கோடி - திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு
ஆகஸ்டு 14-ந் தேதி மட்டும் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.273.92 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது
சென்னை,
சுதந்திர தினத்துக்கு முந்தைய நாளான ஆகஸ்டு 14-ந் தேதியே மதுபானங்களை வாங்குவதற்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் குவிந்தனர். இதனால், டாஸ்மாக் மதுபான கடைகளில் அன்றைய தினம் மட்டும் வழக்கமான நாட்களை விட அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது. இந்த நிலையில் ஆகஸ்டு 14-ந் தேதி எவ்வளவு ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது என்ற தகவலை டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்டு 14-ந் தேதி மட்டும் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.273.92 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:
முதல் அமைச்சர் ஸ்டாலின் போதையில்லா தமிழகத்தை உருவாக்கப் போவதாக ஆகஸ்ட் 11ல் உறுதிமொழி எடுத்தார். தமிழக அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் நிறுவனம் ஆகஸ்ட் 14-ம் தேதி ஒரே நாளில் 273.92 கோடி ரூபாய்க்கு மது பானங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. தி.மு.க.,வின் பயங்கரமான கபட நாடகத்தால் எங்களை வியக்க வைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.