போதைப்பொருள், கூலிப்படை விவகாரம்; காவல் துறை கண்டிப்புடன் செயல்பட வேண்டும் -மு.க.ஸ்டாலின்


போதைப்பொருள், கூலிப்படை விவகாரம்; காவல் துறை கண்டிப்புடன் செயல்பட வேண்டும் -மு.க.ஸ்டாலின்
x

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது, போதைப்பொருள் கடத்துபவர்கள், கூலிப்படையினரிடம் காவல் துறை கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை,

காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறையில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி, தமிழக முதல்-அமைச்சர் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த சிறப்பு விருதுகளை வழங்கும் எழில்மிகு விழா நேற்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பு விருதுகளை வழங்கினார்.

விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்துக்கு வந்தார். அவரைகுதிரைப்படை வீரர்கள், மோட்டார் சைக்கிள் போலீசார் அணிவகுத்து வரவேற்று, அழைத்து வந்தனர். விழா அரங்கத்துக்கு வந்ததும், உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்கள். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

319 பேருக்கு விருதுகள்

விழாவில், 319 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் 59 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கையால் விருதுகளை வழங்கினார். மற்றவர்களுக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விருதுகளை வழங்கினார்கள்.

விருதுகள் பெற்றவர்கள் பட்டியலில் சைபர் கிரைம் டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி, மாநில உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ், மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, சென்னை வடக்கு கூடுதல் கமிஷனர் அன்பு, சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர், நெல்லை நகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார், ஐ.ஜி. டாக்டர் கண்ணன், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி, மதுரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், சென்னை மேற்கு இணை கமிஷனர் ராஜேஸ்வரி, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், பாதுகாப்பு பிரிவு சூப்பிரண்டு திருநாவுக்கரசு, லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்டு விமலா, சென்னை ஆயுதப்படை துணை கமிஷனர் சவுந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் மற்றொரு கை

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்கிறோம். அத்தகைய நண்பர்களாக இருப்பவர்களுக்கும், நண்பர்களாக நடந்து கொள்பவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட வேண்டும். மக்களின் காவலர்களாக இருந்து மக்களை காக்கும், சிறந்து விளங்கும் போலீசாரை பாராட்டவேண்டும். காவல்துறை மக்களோடு நெருக்கமானால்தான் குற்றங்கள் குறையும். மக்களிடம் இருந்து காவல்துறை விலகியிருந்தால், குற்றங்கள் பெருகும். எனவே காவல்துறை 'நம் நண்பன்' என்று சொல்லத்தக்க விதத்தில் போலீசார் செயல்பட வேண்டும்.

காவல்நிலையங்கள் பொதுமக்களின் மக்கள்தொடர்பு பாதுகாப்பு அலுவலகங்களை போல செயல்பட வேண்டும். அந்த அளவுக்கு அதன் செயல்பாடு அமையவேண்டும். தமிழ்நாடு அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், இன்னொரு கை காவல்துறை என்பதை சட்டமன்றத்தில் நான் சொல்லியிருக்கிறேன். இதன் மூலம் காவல்துறைக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணரலாம். காவல்துறை என்றாலே தண்டனை வாங்கிதரும் துறையாக மட்டும் அனைவரும் நினைக்கிறார்கள். காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கித்தரும் துறையாக மாறவேண்டும்.

தலைநிமிர வைக்கவேண்டும்

குற்றங்கள் எந்த சூழலிலும் நடைபெறாத ஒரு காலத்தை உருவாக்குவதற்கு, காவல்துறை திட்டமிட வேண்டும் என்பதுதான் காவல்துறை தலைவர் முதல் போலீசார் வரைக்கும் நான் வைக்கக்கூடிய கோரிக்கை. ஒரே ஒரு போலீஸ்காரர் அல்லது காவல்நிலையம் தனது கடமையை செய்ய தவறும்போது, அது ஒட்டுமொத்தமாக காவல்துறைக்கே தலைகுனிவை ஏற்படுத்துகிறது என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம். எந்த ஒரு போலீஸ்காரராக இருந்தாலும், அவருடைய செயல் காவல்துறையை தலைநிமிர வைக்கவேண்டுமேதவிர, தலைகுனிவை ஏற்படுத்திவிடக்கூடாது.

அத்தகைய எச்சரிக்கை உணர்வு போலீசார் அனைவருக்கும் இருக்குமானால், குற்ற சம்பவங்களே நடைபெறாத மாநிலமாக அது மாறும். எந்த சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரும் சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்ளவேண்டும். அரசியல் ரீதியாகவோ, மதம் மற்றும் சாதி காரணமாகவோ வன்முறைகள் உருவாகாமல் பார்த்துகொள்ளவேண்டும். அப்படி திட்டமிட்டு இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்த நினைப்பவர்களை இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும்.

போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். கூலிப்படையினர் முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும். கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டாக வேண்டும். இத்தகைய நோக்கங்களை கொண்டதாக காவல்துறை கண்டிப்புடன் நடந்தாகவேண்டும். இத்தகைய சூழலை உருவாக்கி, ஒட்டுமொத்தமாக அமைதி பதக்கத்தை தமிழக காவல்துறை பெறவேண்டும் என்று நான் விரும்புகிறேன். பெறுவீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

அமைதி பூங்காவாக தமிழகம்

எல்லோருக்கும் எடுத்துக்காட்டான திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்தில் வழங்கி வருகிறோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, எல்லாருக்கும் எல்லாம் என்ற உன்னதமான தத்துவத்தின் அடிப்படையில் திட்டங்களை தீட்டி வருகிறோம். இவையனைத்திற்கும் அடிப்படை அமைதிதான். அமைதியான சூழலில்தான் தொழில் வளர்ச்சியாக இருந்தாலும், சமூக முன்னேற்றமாக இருந்தாலும் அது ஏற்படும். ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு, தமிழகத்தை நோக்கி, புதிய புதிய தொழிற்சாலைகள் வருகிறது என்றால், தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிற காரணத்தால்தான். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

மக்களை காக்கும் கடமை போலீசாராகிய உங்களுக்கு இருக்கிறது. அதேபோல், போலீசாராகிய உங்களை காக்கக்கூடிய கடமை அரசுக்கும் இருக்கிறது. அதனை மனதில் வைத்து ஏராளமான திட்டங்களை கடந்த ஓராண்டில் தீட்டி இருக்கிறோம்.

ஜனாதிபதி வீர பதக்கம்

இவை அனைத்துக்கும் மேலாக புதிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகு காவல்துறையினரின் கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்பட்டு படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்ற உறுதியை இந்த நிகழ்ச்சி மூலமாக அறிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.

இவை மட்டுமன்றி, இந்த நிகழ்ச்சியில் மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். வீர தீர செயல் புரிந்த காவல்துறை அதிகாரிகள், போலீசார் அல்லது வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுவரும் முதல்-அமைச்சரின் வீர பதக்கங்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள், ஒன்றிய அரசு வழங்கும் ஜனாதிபதி வீர பதக்கத்துக்கான ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளுக்கு இணையாக வழங்கப்படும்.

போலீசாரின் நலனை அரசு கண்ணும் கருத்துமாக பேணி காப்பாற்றும். மக்கள் நலனை போலீசாராகிய நீங்கள்தான் பாதுகாக்கவேண்டும் என்று கேட்டு, பதக்கங்கள் பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவின் தொடக்கத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வரவேற்புரையாற்றினார். இறுதியில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நன்றி தெரிவித்து பேசினார். விழா முடிவில் போலீசாரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கைதட்டி ரசித்து பார்த்தார்.


Next Story