போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
விழுப்புரத்தில் மாணவர்கள், போலீசார் பங்கேற்ற போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கலெக்டர் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் மாவட்ட காவல்துறையின் சார்பில் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இப்பேரணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மோகன் கலந்துகொண்டு விழிப்புணர்வுக்கான சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாணவர்கள், போலீசார் பங்கேற்பு
இதில் பள்ளி- கல்லூரி மாணவர்கள், போலீசார் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு போதைப்பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தியவாறு சைக்கிள் ஓட்டியபடி பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவும் சைக்கிள் ஓட்டிச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் முடிவடைந்தது.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.