தூத்துக்குடியில்போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி


தூத்துக்குடியில்போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது. இப்போட்டியை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மினி மாரத்தான்

தூத்துக்குடி ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் மனஅழுத்தம் இல்லாமல் விளையாட்டு மற்றும் கல்வியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாதனை படைத்திடவும், 'எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்ற அடிப்படையில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது, நமது உடல் ஆரோக்கியம் தான் நமது பாதி சொத்து. எனவே நீங்கள் எந்த அளவுக்கு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். மேலும் இளைஞர்கள் 'எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம், போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்ற உறுதி மொழி ஏற்று போதைக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும். சிலர் கஞ்சா போன்ற போதைகளுக்கு அடிமையாகி தொடர்ந்து உபயோகிப்பதால் இளம் வயதிலேயே ஆண்மையை இழந்து அவர்களுக்கு உடல் நலக்குறைவுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

பரிசு

போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டி ஏற்பாடுகளை அகாடமி பயிற்சியாளர்கள் இம்மானுவேல், ஜெயக்குமார், பழனிசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story