முருங்கைக்காய் விலை இரு மடங்கு உயர்வு-ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை
மழையின் காரணமாக, மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.
மழையின் காரணமாக, மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.
முருங்கைக்காய்
தென் மாவட்டங்களில் மிக முக்கிய மார்க்கெட்டாக, மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. அதன் பின்னர் இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் எடுத்துச் செல்லப்படுகிறது. இதுபோல் மதுரையில் உள்ள சில்லறை வியாபாரிகளும் இந்த மார்க்கெட்டுக்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்தநிலையில், மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முருங்கைக்காயின் விலை படிப்படியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வரை, முருங்கைக்காயின் விலை ரூ.40 மற்றும் அதற்கும் குறைவாக இருந்தது. ஆனால், மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக முருங்கைக்காய் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று இரண்டு மடங்காக உயர்ந்து ரூ.80-க்கு விற்பனையாகியது.
இதுகுறித்து முருங்கைக்காய் வியாபாரிகள் கூறியதாவது:-
முருங்கைக்காய் சீசனானது, கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. தற்போது சீசன் முடியும் நிலையில் உள்ளது. பொதுவாக, மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு திருச்செந்தூர் உடன்குடி, திசையன்விளை, விளாத்திகுளம், ஒட்டன்சத்திரம், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, வலையப்பட்டி போன்ற இடங்களில் இருந்தும், குஜராத், மும்பை போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சீசனை பொறுத்து தினமும் 20 டன் வரை முருங்கைக்காய் விற்பனைக்காக வருகின்றன.
மழைக்காலங்களில் முருங்கைக்காய் விலை அதிகரிக்கும். மழை, முருங்கைக்காய்க்கு எதிரி என்பதால் அந்த காலங்களில் விலை அதிகமாக இருக்கும். வரும் நாட்களிலும் முருங்கைக்காயின் விலை படிப்படியாக உயரும். அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.300 வரை செல்லும் என்றனர்.