முருங்கைக்காய் விலை வீழ்ச்சி
பழனி பகுதியில் வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
பழனி, தொப்பம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் முருங்கை சாகுபடி பரவலாக நடந்து வருகிறது. செடி, மரம் என 2 வகையில் முருங்கை சாகுபடி செய்கின்றனர். இங்கு விளையும் முருங்கை காய்கள் பறிக்கப்பட்டு மொத்த விற்பனைக்காக ஒட்டன்சத்திரம் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் பழனி பகுதியில் உள்ள மார்க்கெட், உழவர்சந்தையில் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தக்காளி விலை உச்சத்தை அடைந்துள்ள நிலையில் முருங்கைக்காய் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது விளைச்சல் அதிகரித்து உள்ளதால் அதன் வரத்து அதிகமாக உள்ளது. எனவே அதன் விலை சரிந்துள்ளது. இதனால் முருங்கை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அமரபூண்டி, சத்திரப்பட்டி, போடுவார்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய பகுதியில் அதிகம் முருங்கை விளைச்சல் ஆகிறது. பழனி பகுதி சந்தையில் கடந்த மாதம் கிலோ முருங்கை ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரத்து அதிகமாக உள்ளதால், ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை ஆகிறது. இது பறிப்புக்கூலி, வண்டி வாடகை ஆகிவற்றுக்கு கட்டுப்படி ஆகாததால் சில விவசாயிகள் காய் பறிக்காமலேயே மரங்களில் விட்டுள்ளனர் என்றனர்.