ஊட்டியில் உயர் அதிகாரியிடம் குடிபோதையில் தகராறு; போலீஸ்காரர் பணியிடை நீக்கம்-போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


ஊட்டியில் உயர் அதிகாரியிடம் குடிபோதையில் தகராறு; போலீஸ்காரர் பணியிடை நீக்கம்-போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் உயர் அதிகாரியிடம் குடிபோதையில் தகராறு செய்த போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவிட்டு உள்ளார்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் உயர் அதிகாரியிடம் குடிபோதையில் தகராறு செய்த போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவிட்டு உள்ளார்.

உயர் அதிகாரியிடம் தகராறு

நீலகிரி மாவட்டம் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் அபி என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் இதற்கு முன்னர் சென்னையில் பணியாற்றி விட்டு ஊட்டிக்கு வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முருகன் கோவில் தைப்பூசம் நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு பணிக்காக கோவை மருதமலை கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் விழா முடிந்து பாதுகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போலீசார் சுமார் 20 பேர் ஒரே வாகனத்தில் மீண்டும் நீலகிரிக்கு கிளம்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது மாவட்ட குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டரிடம், போலீஸ்காரர் அபி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அமைதியாக இருக்குமாறு சப்-இன்ஸ்பெக்டர் வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை.

பணியிடை நீக்கம்

மேலும் அந்த சமயத்தில் அபி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டு உள்ளார். இந்த சம்பவங்கள் அங்கு செல்போன் மூலம் வீடியோ பதிவாக எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஊட்டி வந்த பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். மேலும் செல்போன் வீடியோ ஆதாரங்களும் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் போலீஸ்காரர் அபியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story