மது குடித்த டிரைவர் குட்டையில் விழுந்து சாவு
தந்தையின் இறுதி சடங்கிற்கு வர முடியாத விரக்தியில் குட்டையில் விழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
தாரமங்கலம்;
தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் ரவுண்டானா அருகில் குட்டையில் ஆண் பிணம் கிடப்பதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிணமாக கிடந்தவர் கொங்கணாபுரம் அருகே உள்ள அத்தியப்பனூர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் வெங்கடேஷ் (வயது 36), லாரி டிரைவர் என்பது தெரியவந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு முத்து இறந்து விட்டார். ஆனால் வெங்கடேஷ் லாரியில், வடமாநிலம் சென்று விட்ட நிலையில் அவரால் தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க வர முடியவில்லை. இதனால் சொந்த ஊர் திரும்பிய அவர் மிகுந்த மனவருத்தத்திலும், விரக்தியிலும் இருந்துள்ளார். நேற்று முன்தினம் பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் உள்ள பாலத்தின் மீது அமர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். மதுபோதை அதிகமாகி மயங்கி குட்டையில் தவறி விழுந்தவர் மூச்சு திணறி உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.