மதுபோதையில் காரோட்டி 21 ஆடுகளை கொன்ற டிரைவர்...! சாத்தூரில் பரபரப்பு
சாத்தூர் அருகே சாலையை கடந்த ஆடுகள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 21 ஆடுகள் உயிரிழந்தன.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கம். இவரது மகன் பாண்டி முருகன் (வயது 23) என்பவர் 500 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். இவர் அவ்வப்போது பல்வேறு இடங்களில் கிடை அமைத்து வருவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது சாத்தூர் அருகில் உள்ள சின்னக்காமன்பட்டி பகுதியில் கிடை ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு சின்னகாமன்பட்டி காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற சில ஆடுகள் திரும்ப வராததால் அப்பகுதியில் பாண்டி முருகன் தேடி அலைந்து உள்ளார்.
காணாமல் போன 50 ஆடுகளை கண்டு பிடித்து மீண்டும் கிடை போட்ட இடத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சின்னக்காமன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாத்தூர்-சிவகாசி சாலையை ஆடுகள் கடந்து சென்று கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து சிவகாசி நோக்கி வந்த கார் ஒன்று அதிவேகமாக வந்து ஆடுகள் மீது மோதியது. இதில் ஏராளமான ஆடுகள் தூக்கி வீசப்பட்டன.
இதனால் பலத்த காயம் அடைந்த 21 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. தகவல் அறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிவகாசி தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த அனந்தன் (43) இவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.