ஈரோட்டில் திராவகம் குடித்து வியாபாரி தற்கொலை
ஈரோட்டில் திராவகம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு குறிக்காரன்பாளையம் சரவணபவன் 2-வது வீதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 57). இவர் நொச்சிக்காட்டு வலசு பகுதியில் கடை வைத்து பருப்பு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சில மாதங்களாக வியாபாரத்தில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் கடைக்கு செல்லாமல் இருந்தார். மேலும், வியாபாரத்துக்காக வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியாமல் மனவேதனையுடன் காணப்பட்டார்.
கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்தபோது கழிவறையை சுத்தப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் திராவகத்தை எடுத்து கோபாலகிருஷ்ணன் குடித்தார். இதனால் எரிச்சல் தாங்க முடியாமல் அலறிய அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.